புதிய அமைச்சரவையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் பொறுப்பு ரிசாத்பதியுதீனுக்கே!

sid_Fotorஏ.எச்.எம்.பூமுதீன்
ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் மலர இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி புதிய அரசில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சையும் எமது தலைவர் ரிசாத் பதியுதீனே பொறுப்பேற்பார் என அ.இ.ம.கா வேட்பாளர் சித்திக் நதீர் சூளுரைத்தார்.
மருதமுனையில் நேற்றிரவு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 18 திகதி வெளிவர இருக்கும் தேர்தல் முடிவு முஸ்லிம் காங்கிரஸூக்கு பாரிய சரிவைக் கொண்ட முடிவாகவே அமையவுள்ளது. அதே நேரம் அ.இ.ம.கா தேசியப் பட்டியல் அடங்கலாக 10 ஆசனங்களுடன் புதிய பாராளுமன்றத்திற்குள் நுழையும்.
மருதமுனையில் வங்குறோத்து அடைந்துள்ள முகா, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் வேலை பெற்றுத் தருகின்றோம் எம்முடன் வந்து இணையுங்கள் என போலியான தொழில் இலஞ்சம் வழங்கும் நிலைக்கு இன்று ஆளாகியுள்ளது.
இந்த விடயத்தில் மருதமுனை இளைஞர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சை எமது தலைவரான ரிசாதே பொறுப்பேற்கவுள்ளார். 
10 ஆசனங்களுடன் சக்திமிக்கதாக வரவுள்ள எமது கட்சிக்கு எமது தலைவர் கோரும் எந்த அமைச்சையும் வழங்குவதற்கும் இன்று ரணில் விக்ரமசிங்க தயாராகியுள்ளார். எனவே மருதமுனை இளைஞர்கள் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாறாமல் அடுத்து வரும் 12 நாட்களுக்கும் பொறுமையுடன் இருந்து தொடர்ந்து அ.இ.ம.காவுடன் இணைந்திருந்து நல்லதொரு எதிர்காலத்திற்காக பிரார்த்திக்குமாறும் அவர் தனது உரையின் போது மேலும் குறிப்பிட்டார்.