-எம்.வை.அமீர்-
சிலர் இங்கு கூறித்திரிவதைப் போன்று நாங்கள் மிதிபலகையில் தொங்கிச் செல்பவர்கள் அல்ல என்றும் எங்களது கட்சியிலேயே சிலர் தொங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், ஐக்கிய தேசியக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் நடக்கவிருக்கின்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியூடாக வேட்பாளராக போட்டியிடுபவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரித்து அக்கட்சியின் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதான முற்றலில் 2015-08-04ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் நடக்கவிருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளவருமான தயாகமகே மற்றுமொரு வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சாரச் செயலாளரும் முஸ்லிம் கலாச்சார அமைச்சரின் இணைப்பாளருமான அஸ்வான் சக்கப் மௌலானா ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அஸீஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் குழுமியிருந்த சனத்திரள் மத்தியில், பொலிசார் ஒலிபெருக்கியை தடை செய்திருந்த நிலையில் ஆசாத் சாலி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
இங்கு நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய றஸ்ஸாக், நாங்கள் எங்களது மக்களின் தேவைகளை கட்சித் தலைமையிடம் நேரடியாக சென்று பெறக்கூடியவர்கள் என்று தெரிவித்தார். மற்றவர்களைப்போல் நாங்கள் தரகர்களை வைத்துப் போகவேண்டிய தேவையற்றவர்கள் என்று கூறிய அவர், தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் ஏற்கனவே கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை சம்மந்தமாக முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் முஸ்தபா அவர்கள் ஊடாக முன்னெடுப்புக்களை செய்து அப்போதே ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்சாபனத்திலும் இணைத்ததாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தேயுள்ளதாக குறிப்பிட்ட அப்துல் றஸ்ஸாக் அங்கு யாரும் வரலாம் போகலாம் ஆனால் உரிமை கோரமுடியாது என்றும் தெரிவித்தார்.
நடக்கவிருக்கின்ற தேர்தலில் நாட்டை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் என்றும் அதேபோன்று அம்பாறை மாவட்டத்தையும் கைப்பற்றும் என்றும் அந்த வெற்றியில் சகலரையும் இணைந்து கொள்ளுமாறும் அறைகூவல் விடுத்தார். பணத்துக்கோ அல்லது வெற்றுக் கோஷங்களுக்கோ அடிபணிந்து நமக்கு இருக்கின்ற உரிமையை அடகுவைத்துவிடாது சிந்தித்து நாட்டினதும் நமது எதிகால சந்ததியினருக்காகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு அபிவிருத்தியில் குன்றிப்போயுள்ள நமது பிராந்தியத்தை அபிவிருத்தியடைய வைக்க பொருத்தமானவர்களை தெரிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். கட்சி ஆதரவாளர்களின் உற்சாக வரவேற்புடன் நடைபெற்ற இக்கூடத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்கள் இறுதிவரையும் தங்களது உற்சாகத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.