சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட தாதியர் போதனாசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையின் ஊடாக, இலங்கை தாதியர் போதனாசிரியர்கள் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் தாதியர் போதனாசிரியராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.சீ.எம்.சீ. றிழா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் பயிற்சிக்காக இணைந்து கொண்ட இவர், 2004ம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தனது முதல் தாதியர் பணியை ஆரம்பித்தார். பின்னர் 2010ல் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இணைந்து இறுதிவரை பணியாற்றினார்.
அவரது காலப்பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு நிலையம்,தரநிர்ணயப்பிரிவு மற்றும் தீவிர கவனிப்புப்பிரிவு போன்றவற்றை நிறுவுவதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு குறித்த பிரிவுகளை நிறுவினர்.
தனது தாதியர் டிப்ளோமாவை மட்டக்களப்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையிலும் தாதியர் பட்டப்படிப்பை நாவல திறந்த பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவி யூ.எல்.எம்.காசீம் மற்றும் எம்.ரீ.ஜுனைதா போன்றவர்களின் அன்பு மகனான எம்.சீ.எம்.சீ. றிழா, றஸ்தான் ஜாமி மற்றும் ஜீஷா றீம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜுமானா வேகத்தின் கணவருமாவார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் ஏ.எம்.சிராஜ் தலைமையில் 2015-04-21ல் சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி கௌரவவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வுக்கு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள் பிரதம அதிதியாகவும் சத்திரசிச்சை நிபுணர் டாக்டர் பீ.கே.ரவீந்தரன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் மற்றும் டாக்டர் ஏ.எல்.அஜ்வத். டாக்டர் ஏ.எல்.எம்.பாறுக் போன்றவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்பணிபுரியும் டாக்டர்கள் தாதியர் உட்பட ஏனைய நிருவாக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
நிகழவில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களால் இலங்கையின் முதல் முஸ்லிம் தாதியர் போதனாசிரியர் எம்.சீ.எம்.சீ. றிழாவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டதுடன் நினைவுப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.