அபிவிருத்திக்கு அடிமையாகாமல் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்த வேண்டும்!

முகம்மத் இக்பால் 

 

பேரினவாத அரசுகளின் சலுகை அபிவிருத்தியில்  தமிழர்கள் உரிமைகளை இழந்தனர். அபிவிருத்திக்கு அடிமையாகாமல் முஸ்லிம்கள் பேரம்பேசும் சக்தியினை பலப்படுத்த வேண்டும்.

எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் எப்போதும் இன் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளான முற்போக்கு அரசியல் சக்திகளை இல்லாதொழித்து, சிறுபான்மை மக்களின் பேரம் பேசும் சக்தியினை சிதைத்து, அம்மக்களை தங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக வைத்துக்கொள்வதற்காக பேரினவாதிகள் பயன்படுத்துகின்ற ஒரேயொரு சாதனம் அபிவிருத்தியாகும். 

இது இன்று நேற்று அல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இந்த அபிவிருத்தி எனும் சலுகைகளை காட்டி சிறுபான்மை மக்களின் முற்போக்கு சிந்தனையை மழுங்கடிக்க முற்பட்டதே வரலாறாகும்.

அந்தவகையில் ஆங்கிலேயரினால் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க தீர்மானித்தபோது அன்றைய தமிழ் தலைவர்களால் ஐம்பதுக்கு ஐம்பது என்ற சமபல பிரதிநிதித்துவ கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கையின் எதிர்கால ஆபத்தினை உணர்ந்துகொண்ட சிங்கள தலைவர்கள்,  நேரடியாக இதனை நிராகரிக்காமல் அக்கோரிக்கையை முறியடிக்குமுகமாக ஏராளமான அபிவிருத்திகள் வடக்கின் தமிழர் பிரதேசங்களிலும் மலையகத்திலும் சிங்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அபிவிருத்தியினால் மயங்கிய அன்றைய தமிழ் தலைவர்களும், தமிழ் மக்களும், சிங்கள ஆட்சியாளர்களை முழுமையாக நம்பியதனால் இந்நாட்டின் முழு அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளில் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை. இதனால் எதிர்காலத்தில் தங்களது சமுதாயம் சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பாரிய யுத்தமொன்றினை மேற்கொண்டு அழிவுகளை சந்திக்கும் என்று அன்றைய தமிழ் தலைவர்களால் ஊகிக்கவும் முடியவில்லை.

சுதந்திரம் என்ற போர்வையில் இந்நாட்டின் ஏகபோக உரிமைகளும், அதிகாரங்களும் சிங்களவர்களின் கைகளுக்கு கிடைத்தபின்பு எல்லாம் தலைகீழாக மாறியது. வடக்கின் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இடைநடுவில் நின்றுபோனதுடன் மலையக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆகக்குறைந்த உரிமையான பிரஜா உரிமையும் பறிக்கப்பட்டது.

அதுபோல தொடர்ச்ச்யாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களின் தமிழர் மீதான அடக்குமுறை செயற்பாட்டினால் விரக்தியுற்று தமிழீழம் என்ற தனி நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரபாகரன் போன்ற தமிழ் இளைஞ்சர்கள் மும்முரமாக செயற்பட்டபோது, அதனை முறியடிக்கும் வகையில் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் தனது முகவரான அன்றைய யாழ்ப்பான முதல்வர் அல்பிரட் துரையப்பா மூலமாக பாரிய அபிவிருத்தி பணிகளை யாழ்ப்பாணத்திலே முன்னெடுத்தார். அத்துடன் ஏராளமான தமிழ் இளைஞ்சர்களுக்கு தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. இது தமிழர்களின் முற்போக்கு சிந்தனையை மழுங்கடிக்கும் சிங்களவர்களின் வழக்கமான நயவஞ்சக செயற்பாடு. ஏற்கனவே இதே அபிவிருத்தியினால் உரிமைகளை இழந்தோம் என்று உணர்ந்த பிரபாகரன், உரிமையற்ற அபிவிருத்தியினால் எதிர்கால ஆபத்தினை புரிந்துகொண்டு  அல்பிரட் துரையப்பாவை சுட்டு கொன்றதன் மூலம் தமிழீழ உரிமை போராட்டத்தை முன்னெடுத்தார். 

அதுபோலவே ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் எழுச்சி பெற்றுவந்த முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்பும் பொருட்டு அன்றைய ஐ.தே.க.யின் முஸ்லிம் அமைச்சர்கள் மூலமாக ஏராளமான அபிவிருத்திபனிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் அபிவிருத்திக்கு பின்னால் செல்லவில்லை. 

முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏகபோக தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ச்சியடைந்துவிட்ட முஸ்லிம் காங்கிரசை,தலைவர் அஸ்ரபின் மறைவுக்கு பின்பு அதனை பலயீனப்படுத்தி முஸ்லிம் மக்களின் பேரம் பேசும் சக்தியினை அழித்தொழிக்கும் நோக்கில் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களால் பேரியல் அஸ்ரபுக்கு அமைச்சுப்பதவியும் வழங்கி ஏராளமான அபிவிருத்தியை முன்னெடுக்க கூடுதல் நிதியும் வழங்கப்பட்டது. ஆனால் அதே அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு சாதாரண அபிவிருத்திக்காகவேனும் நிதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

பேரியல் அஸ்ரப் மூலமாக முஸ்லிம் காங்கிரசை பலயினப்படுத்தும் சந்திரிக்காவின்  திட்டம் வெற்றியளிக்காததனால் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகவும், பிரதி அமைச்சராக்கவும் இருந்த அதாஉல்லா போன்றவர்களை முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரித்தெடுத்து பேரியல் அஸ்ரப் மூலமாக சாதிக்க முடியாததை இவர்கள் மூலமாக சாதிக்க சந்திரிக்கா முற்பட்டார்.

அதுபோலவே மகிந்த ராஜபக்சவின் பத்து வருட ஆட்சிக்காலத்தில் அதாஉல்லா, ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை தனது முகவர்களாக வைத்துக்கொண்டு முஸ்லிம் பிரதேசங்களில் ஏராளமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்களிடம் இருந்து ஓரம் கட்டுவதற்காக மகிந்த ராஜபக்ஸ தனது அனைத்து வளங்ககளையும் இம்மூன்று முகவர்கள் மூலமாக பயன்படுத்தினார்.

இங்கே விடயம் என்னவென்றால் மகிந்தவின் அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் இரண்டு தடவைகள் அமைச்சராக இருந்தும், பிரதி அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தில் பாதியளவுக்கு கூட அமைச்சர் ஹக்கீமுக்கோ, அமைச்சர் பௌசி போன்ற தெற்கின் முஸ்லிம் அமைச்சர்களுக்கோ வழங்கப்பட்டிருக்கவில்லை. தெற்கிலே முஸ்லிம் காங்கிரஸ் பலமான சக்தியாக இருந்திருந்தால் தெற்கின் முஸ்லிம் அமைச்சர்களுக்கு அபிவிருத்திக்காக கூடியளவு நிதி வழங்கப்பட்டிருக்கும்.  

முஸ்லிம் காங்கிரஸ் எந்தெந்த மாவட்டங்களில் பலமாக இருந்ததோ அந்த மாவட்டத்திலேயே இம்மூன்று அமைச்சர்கள் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தியும், தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இது முஸ்லிம் மக்கள் மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவரும் எந்தவித பிரயோசனமும் அற்றவர்கள் என்று முஸ்லிம் மக்களுக்கு காண்பித்து அதன் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்வதற்காக.

இத்தனைக்கும் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்து முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்ததே அவர் செய்த பாரிய தவறாக பேரினவாத தலைவர்களால் பார்க்கப்பட்டது. அத்துடன் இம்மூன்று பேரினவாத முகவர்களும் தாங்களே அனைத்து அபிவிருத்திகளும் செய்வதாகவும், ஹக்கீமினால் எதுவும் செய்யமுடியாது என்றும் ஊடகங்கள் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டது. 

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்போது, தமிழ் மக்களின் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட டக்லஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்கள் மூலமாக தமிழ் பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்ட அதே வேளை, முஸ்லிம் மக்களின் ஏக பிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும்போது முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும் அதாஉல்ல, ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் மூலமாக அபிவிருத்தி பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டது ஏன்?

அதாவது தமிழ், முஸ்லிம் மக்களினால் ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு, பேரினவாதிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் மூலமாக அந்தந்த பிரதேசங்களில் அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதன் மூலம், அம்மக்களின் ஏகபோக உரிமை கோரும் அரசியல் சக்திகளை அழிப்பதற்காகவே சிங்கள பேரினவாதம் அபிவிருத்தியை பயன்படுத்தி வருகின்றது.

ஒரு நாடு அபிவிருத்தி அடைவதென்றால் அந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அதில் பிரதேச ரீதியாகவோ, இன ரீதியாகவோ புறக்கணிக்க முடியாது. எனவே அபிவிருத்தி என்பது ஒரு நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். அந்தக்கடமையை செய்யும்போது நாங்கள் அதற்கு சோரம் போக முடியாது. ஆங்கிலேயர்களினால் சுதந்திரம் வழங்கப்படும்போது தமிழ் தலைவர்கள் அபிவிருத்தியின்பக்கம் செல்லாது இருந்திருந்தால் முல்லியவாய்க்கால் வரையிலான அழிவுகள் அவர்களுக்கு வந்திருக்காது. எங்களது இலக்கு சலுகையல்ல. மாறாக உரிமையும், உரிமையுடன் கூடிய அபிவிருத்தியுமாகும். அதனை அடைவதற்கு எங்களது பேரம் பேசும் சக்தியான முஸ்லிம் காங்கிரசை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.