தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால், ஜூன் 19ஆம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரையில் ஜூன் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு அனைத்தும் ஜூன் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கு தொடருமென தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதிவரை தொடரும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரையின் பெரும் பகுதியில் ஜூன் 5ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு தொடரும். அதற்குப் பிறகு, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற ஊரடங்கு இந்தப் பகுதிகளில் அமலில் இருக்கும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மாவட்டங்களுக்குள் இயங்கிவந்த பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுகின்றன.

மேலும் ஜூலை 5, 12, 19, 26 தேதிகளில், அதாவது ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது.

(bbc.tamil)