இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் – ஆஷாத் சாலி

ஊடகப்பிரிவு –   

இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இராணுவமயமாக்கல் மிகவும் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு உட்பட சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கெடுபிடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயலாளரை பிரதானியாக நியமித்து, தடல்புடலாக வேலைகள் இடம்பெறுகின்றன. கொரோனா உச்சமாக இருந்த வேளையிலும், ஊரடங்கு அமுலில் இருந்த போதும், செயலணி உறுப்பினர்கள், அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்துக்குச் சென்று, தொல்பொருள் பிரதேசத்தை அளவிடுகின்றனர். விஹாரைகளுக்குச் சொந்தமானது எனவும், புராதன சின்னங்கள் புதைந்து கிடப்பதாகவும் அறிவித்து, வடக்கு, கிழக்கு மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

அரச இயந்திரத்தின் முன்னணி செயற்பாடுகளுக்கும், முதன்மை பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். போகின்ற போக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் காலாவதியானதன் பின்னர், அதன் அங்கத்தவர்களாக இராணுவத்தினரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் அடக்கி, ஒடுக்கி இனவாதிகளை மகிழ்வூட்டி, பெரும்பான்மைவாதிகளின் வாக்குகளை கொள்ளையடிப்பதுதான் இவர்கள் போட்டிருக்கின்ற திட்டம்.

பொதுஜன பெரமுன வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இலவசமாக உரம் கிடைக்குமென்ற ஆசையில், பயிர் வளர்த்த விவசாயிகள், இன்று நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி, அன்றாட உணவுக்கே வழியின்றி மக்கள் திண்டாடுகின்றனர். பொதுத் தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதென்று அவர்களுக்கு விளங்கிவிட்டது. எனவேதான், மீண்டும் கடும்போக்காளர்களை தூண்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும், மின்சாரக் கதிரை மற்றும் டயஸ்போராக்களின் திட்டமென அப்பாவி மக்களை திசைதிருப்பியே ஆட்சிக் கதிரையை பிடித்தனர். எனினும், சர்வதேசத்திடம் பெற்ற கடனை இறுக்க முடியாமலேயே, இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதவியைவிட்டு ஓடினர்.

தற்போது, மொட்டுக் கட்சியினர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் டீல் ஒன்றை ஏற்படுத்தியே தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும், மக்கள் தெளிவடைந்துவிட்டனர். ஆகையால், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் சாதக நிலைமைகளே தென்படுகின்றன” என்று கூறினார்.