பொத்துவிலில் நீண்டகாலமாக சட்ட ரீதியான ஆவணங்களை தம் வசம் வைத்துள்ள மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படக்கூடாது – சலீம்

பொத்துவில் பௌத்த விகாரை தொடர்பில் சுமூகமான தீர்வுக்கு வேட்பாளர் சலீம் நடவடிக்கை.

பொத்துவில் முகுது மகா விகாரைக்கென அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணியை அளவீடு செய்தல் மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது முஸ்லிம்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளுமாறு 2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த பௌத்த விகாரைக்கென காணியை நிலஅளவை செய்து அதனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் காரணமாக, பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச நிலையை போக்கவும் அதன் அபிவிருத்தி பணிகளின் காரணமாக சாதாரண பொதுமக்களின் காணிகள் பறிபோகாது பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எம்.அன்ஸார் (பொத்துவில்) அவர்கள் வேட்பாளர் சலீம் அவர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதனையடுத்து, பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோரைத் தொடர்பு கொண்ட வேட்பாளர் சலீம் அவர்கள், விகாரை விடயத்தில் மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், சட்ட ரீதியான ஆவணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களு அநீதிகள் இழைக்கப்படாது சுமூகமான தீர்வினை எடுக்குமாறும் மேலும் இது குறித்து தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் ஊடாக அரச உயர் மட்டத்தினருடன் பேசி
தேவையான முன்னெடுப்புகளை செய்வதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.