தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது பொறுப்பை தட்டிகழித்து வருகின்றார் : ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

இன்னும் இரண்டு மாதங்களில் 9 மாகாண சபைகளில் 6 சபைகளின் பதவிக்காலம் முடிந்து விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனின் தலைவர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தனது பொறுப்பை தட்டிகழித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.தேர்தல் நடத்தப்படுவது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவிய போது தன்னால் எதனையும் செய்ய முடியாது எனக் கூறியதுடன் நாடாளுமன்றத்தினால் மட்டுமே இதற்கான தீர்வை வழங்க முடியும் எனக் கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது இந்த கருத்து சட்டவிரோதமானது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து, அதனை சீர்குலைத்து வரும் அரசாங்கம், தந்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.