ரவூப் ஹக்கீம் பிள்ளையானின் கட்சியுடன் புரிந்துணர்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து பல இரகசியங்கள் வெளிவந்துள்ளன.

அதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்ததாக அக்கட்சியின் கல்குடா பிரதேச பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் சகோதரர் ஒருவருக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை, மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வுக்கு முன்னர் ரவூப் ஹக்கீம் பேத்தாழையில் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்தே இந்த அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதில் முதல் இரு வருடங்களுக்கு மட்டுமே தமிழர் ஒருவர் தவிசாளராக இருக்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த நிபந்தனைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சம்மதித்துள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசசபையின் தமிழ் செயலாளரை இடம்மாற்றி அந்த இடத்திற்கு முஸ்லிம் செயலாளரை நியமிப்பது என்றும் நிபந்தனை போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தங்களுக்கு கிடைத்த விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு உப தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்றால், மூன்று உறுப்பினர்களை பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு உப தவிசாளர் பதவியை ஏன் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

கோறளைப்பற்று மத்திக்கு பிரதேசசபையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் முனைப்புடன் இருக்கும் சந்தர்ப்பத்தில், உப தவிசாளராக முஸ்லிம் ஒருவர் வந்திருந்தால் தனியாக பிரதேசசபையை பெற்றுச் செல்வதற்கு தமிழர்கள் உதவியாக இருந்திருப்பார்கள்.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசசபையை ஆட்சி செய்த போது பிள்ளையானால் ஒரு முஸ்லிம் செயலாளர் நியமிக்கப்படடார்.

இப்போது மீண்டும் முஸ்லிம் செயலாளரை நியமிக்க கட்சி சம்மதம் வழங்கியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் இவர்களுக்கு எதிராக செயற்படுவதாக கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்வது வேடிக்கை” என பிரதேச நலன்விரும்பிகள் கூறுகின்றனர்.