அநுர குமரவால் முடியும் என்றால் அறிக்கை மன்னர்களான முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏன் இயலவில்லை?

மனச்சாட்சி
 
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்…. 
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்….
 
இந்தியாவில் அரசியல் சூழ்நிலைகள் மோசமாக போய்க் கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போக்கை விமர்சிக்கும் வகையில், கவிஞர் கண்ணதாசன் இந்த பாடல் வரிகளை ஒரு திரைப்படத்துக்காக எழுதியிருந்தார். 
‘கொள்ளையடிப்பவன் வள்ளலைப் போலே, கோவிலை உடைப்பவன் சாமியைப் போலே வாழ்கின்றான். ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்…. என்று தொடரும் இப்பாடல் – இலங்கையின் பெருந்தேசிய அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நம்பிக்கையும் நாணயமும் நேர்மையும் கேள்விக்குள்ளாகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப ஞாபகத்திற்கு வருவதுண்டு. 
 
 
உண்மையில் யார் யாரை விமர்சனம் செய்தாலும், எந்த அரசியல்வாதி மீது எந்தப் பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் அது வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வி கண்டாலும், அதன் உண்மை நிலைவரம் என்னவென்பதை அவரவரின் மனச்சாட்சியே நன்கறியும். அதுபோல இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து கோலோச்சியவர்கள், இன்று அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உத்தமர்களா இல்லை என்பதையும் அவர்கள் சமூகத்திற்காக உண்மைக்குண்மையாக செயற்படுகின்றார்களா இல்லையா என்பதையும் அவரவர்;களுடைய மனச்சாட்சியின் நீதிமன்றமே நன்கறியும். 
 
நம்பிக்கையில்லா பிரேரணை
பெரும் பெரும் எதிர்பார்ப்புக்களோடு ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு கடுமையான சவால்களோடு மறுதரப்பால் எதிர்கொள்ளப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பானது முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் நிலைப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டியிருப்பதுடன், வாக்களிப்பின் அடிப்படையில் பிரேரணை வெற்றிபெறவில்லை என்றாலும், மறைமுகமான அரசியல் வெற்றியை ஓரிரு தரப்பும், தோல்விகளை வேறு தரப்புக்களும் பெற்றுக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
 
அந்த வகையில் முஸ்லிம்களின் அரசியலில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ‘உத்தமர் தனத்ஐ’த இது எங்ஙனம் வெளிப்படுத்தியிருக்கின்றது என்பதையும் ஆழமாக நோக்கவேண்டிய ஒரு கடப்பாடு நம்மீது இருக்கின்றது.
 
எப்போதும் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சிமாற்றக் கனவு இருப்பது போலவே இந்த நல்லாட்சியில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பு கூட்டு எதிர்க்கட்சிக்கு மட்டுமன்றி சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு ஏதுவாக பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்று வராது என்ற சூழ்நிலையில், குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியும் ஆளும் கட்சிக்குள் இருந்த கறுப்பு ஆடுகளும் அதற்கான தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தன. 
அந்த சந்தர்ப்பத்தில்தான் இலங்கை மத்திய வங்கி பிணை முறி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துச் சிதறியது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள்ளேயே மிகப் பெரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை சற்று பலமான நிலையில் இருந்த எதிர்க்கட்சியின் வாய்க்கு அவல் கிடைத்தது போலிருந்தது. அதுமட்டுமன்றி, இனவாத நடவடிக்கைகளும் தலைதூக்கியதுடன் அம்பாறையிலும் திகணவிலும் இனக்கலவரங்களே கட்டவிழ்த்து விடப்பட்டன. 
 
அதாவது, இனவாதத்தையும் ஊழலையும் தேர்தல் பிரசாரத்திற்கான முதலீடாக பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கூட்டு தலைமைத்துவத்திலான இவ்வரசாங்கம் அவ்விரண்டிற்கும் இடமளித்தமை ஆட்சியில் பண்புமாற்றம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காத்திருந்தவர்களுக்கு கையில் துருப்புச் சீட்டு கிடைத்தது மாதிரி இருக்கின்றது. அந்த துருப்புச் சீட்டின் பிரயோக வடிவமே, பிரதமர் ரணில் மீதான இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்று கூறலாம்.  
 
பகிரங்க வாக்கெடுப்பு
அந்த வகையில், பிணைமுறி விவகாரம், முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் உள்ளடங்கலாக பிரதமருடன் தொடர்புபட்ட 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிரணி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபைக்கு கொண்டு வந்திருந்தது. பாராளுமன்றத்தில் இதன்மீதான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று கடந்த 4ஆம் திகதி இரவு 8.30 இற்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது. 
 
இந்த வாக்கெடுப்பில் 122 பேர் பிரேரணைக்கு எதிராக அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 76 பேர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த அதேநேரத்தில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் வாக்கெப்பிற்கு சமூகமளித்திருக்கவில்லை. எனவே 46 வாக்குகளால் பிரேரணை தோற்றது. எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியில் இல்லாத இன்றைய காலகட்டத்தில், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்து கொண்ட முஸ்லிம் எம்.பி.க்கள் தவிர ஏனைய  அனைத்து முஸ்லிம் எம்.பி.க்களும் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் தோரணையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். 
 
அதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும் அக்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்களும் பிரேரணைக்கு எதிர்த்து கையுயர்த்தியிருக்கின்றனர். அதாவது கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நேர்மைத் தன்மையை எவ்வாறு ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸூடன் சேர்ந்து றவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா. மற்றும் றிசாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸூம் உறுதிப்படுத்தி வந்தனவோ, அதுபோலவே இன்று மு.கா.வும் ம.கா.வும் ‘பிரதமர் நம்பிக்கையானவர்’ என்றும் ‘அவர் மீதான குற்றச்சாட்டுக்களுடன் தங்களுக்கு உடன்பாடில்லை’ என்பதுபோலவும் வாக்களிப்பில் வெளிக்காட்டியுள்ளன. 
 
திகண சம்பவம் உள்ளடங்கலாக, முஸ்லிம்களோடு சம்பந்தப்பட்ட பல விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தும் றவூப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும் அவர்களது கட்சி உறுப்பினர்களும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் பிரதமரை ஆதரித்தார்கள் என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகின்றது.
 
உண்மையில் இதைவிடப் பெரிய ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய ஆட்சியாளர்களை நாமறிவோம். அவர்களுக்கு எதிராக இப்படியொரு நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்குக் கூட அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி திராணியற்று இருந்ததும் நாமறியாத சங்கதியல்ல. 
 
மஹிந்த சரிவராது
ஆனால் இப்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது வெறுமனே ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையுடன் மட்டும் தொடர்புபட்டதல்ல என்பதும் வெள்ளிடைமலை. அவரை இதில் தோற்கடிப்பதன் மூலம் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டுவரும் ஒரு நீண்டகால நிகழ்ச்சி நிரலும் பேராசையும் இதற்குப் பின்னால் இருந்ததை சாதாரண மக்கள் கூட அறிவார்கள். ஆதலால், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பவர்கள் ஆட்சியில் பகுதியளவேனும் ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற நிலையிருந்தது. 
 
இதனை அடிப்படையாக வைத்து நோக்கினால், மஹிந்த அணியோ. பொதுஜன பெரமுனவோ அல்லது சுதந்திரக் கட்சியின் மஹிந்த சார்பு அரசியல்வாதிகளோ அதிகாரத்திற்கு வருவது ஒப்பீட்டளவில் முஸ்லிம்களிற்கு அவ்வளவு விருப்பத்திற்குரியது அல்ல. இன்றைய அரசாங்கமும் ஜனாதிபதியும் பிரதமரும் கூட முஸ்லிம்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை என்பதும் இந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதும் வேறு விடயம். 
 
ஆனால் அதற்கான மாற்றுத்தெரிவு கூட்டு எதிரணி என்ற முடிவுக்கு முஸ்லிம்கள் இன்னும் வரமுடியாத விதத்தில் அவர்கள் கடந்தகாலத்தில் பல அனுபவங்களை முஸ்லிம்களுக்கு தந்திருக்கின்றார்கள். எனவே, மென் மற்றும் வன் இனவாதங்களை மீண்டும் வளரவிட்டதற்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் இந்த அரசாங்கத்திற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டிய தேவை இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்றாலும், ஒப்பீட்டளவில் அதற்கான மாற்றுத் தெரிவு அவ்வளவு உசிதமானதல்ல என்பதை மறுதலிக்க முடியாது. 
 
இந்தக் காரணத்திற்காக முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் ஏனைய முஸ்லிம் எம்.பி.க்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். அதேபோல், ரணில் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்று, ஆட்சியில் பண்புநிலை மாற்றமோ முழுமையான மாற்றமோ ஏற்படாது என்ற அனுமானத்திலும், வெற்றிபெறுகின்ற பக்கத்தில் இருந்து விட்டுப் போதல் என்ற பழக்க தோசத்திலும் முஸ்லிம்  கட்சிகளும் எம்.பி.க்களும் கண்ணைமூடிக் கொண்டு ‘விருத்தய்’ (பிரேரணைக்கு எதிர்ப்பு) என்று சொல்லியிருக்கலாம். இன்னும் அவர்களால் வெளியில் சொல்ல முடியாத ‘காரணங்களும்’ இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. 
காரணம் என்ன?
 
இந்த பிரேரணையை கொண்டு வந்த கூட்டு எதிரணிக்கு ஒரு காரணம் இருந்தது, ஒரு அஜந்தா இருந்தது. இதற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கும் எம்.பி.க்களுக்கும் ஒரு நியாயப்படுத்தல் இருந்தது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான காரண காரியத்தோடு ரணிலை ஆதரித்திருக்கின்றது. ஆனால் 15 மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் இந்தப் பிரேரணையை ஏன் எதிர்த்தனர் என்ற கேள்விக்கு அவர்கள் தெளிவான விளக்கம் எதனையும் வழங்கவில்லை. 
 
அதுவும், நல்லாட்சி அரசாங்கத்துடன் குறிப்பாக பிரதமருடன் மிக நெருக்கமானவர்கள் என்று கருதப்படுகின்ற அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் தலைமையிலான இரு காங்கிரஸ்களும் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டன. ஆனால் ஆட்சியமைப்பு என்று வந்தபோது முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவின் உதவியைப் பெற்றுக் கொண்டது. மறுபுறத்தில் மக்கள் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் பல சபைகளில் ஆட்சியை நிறுவியது. 
 
மேற்படி காரணத்தாலும், அதேபோல் இனவாதத்தை தடுக்காமை, அம்பாறை மற்று திகண இன வன்முறைகளில் சட்டத்தை நிலைநாட்டுவதில் சட்டம் ஒழுங்கு அமைச்சு கடைப்பிடித்த மெத்தனம் மற்றுமுள்ள அரசியல் நலன்சார்ந்த காரணங்களாலும் அரசாங்கத்துடன் குறிப்பாக ஐ.தே.க. தலைவருடன் மு.கா.வும் ம.கா.வும் அதிருப்தியடைந்திருந்தன. ஹக்கீம் அதனை பகிரங்கமாகவே கூறியுமிருந்தார். ஆனால், இந்த நிலையிலேயே பிரதமர் ரணிலை காப்பாற்றும் விதத்தில் வாக்களித்திருக்கின்றனர். அப்படியென்றால், மேற்குறிப்பிட்;ட காரணங்களை மிகைத்த காரணம் ஏதாவது முஸ்லிம் கட்சிகளுக்கு இருந்திருக்க வேண்டும். அது என்ன என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. 
 
ஊழல் மோசடி குற்றச்சாட்டு என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இப் பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என்று யாராவது எண்ணியிருந்தால் அவர்கள் கற்றுக்குட்டிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இன்றிருக்கின்ற பெருந்தேசிய அரசியல் தலைமைகளுள் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தலைமை ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்  மட்டும்தான். அவர் இருக்கின்ற காலத்தில் கிடைக்காத தீர்வு வேறு யாராலும் கிடைக்காது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் அனுபவம் அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். 
 
பயன்படுத்திய தமிழர்
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு சும்மா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உண்மையில் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார்கள். இந்த தருணத்தில் எதைக் கேட்டாலும் பிரதமர் ரணில் இல்லை என்று சொல்ல முடியாது என்பதை முஸ்லிம் தேசிய தலைவர்கள் அறியாவிட்டாலும் தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் கூட அறிவார்கள். எனவே 10 நிபந்தனைகளை முன்வைத்தே தமிழ் தேசியம் ரணிலுக்கு ஆதரவளித்திருப்பதாக அறிய முடிகின்றது.
 
அரசியலமைப்பு மறுசீரமைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரம், மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, காணமல் போனவர்களுக்கான செயலணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், அதற்கான எழுத்துமூல உத்தரவாதத்தை பிரதமரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு எதிராகவும் பிரதமர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவும் வாக்களித்திருக்கின்றது என்று கூறப்படுவது முக்கியமானது. அப்படியாயின் தமிழ் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரியம் சாதித்துள்ளது எனலாம். 
 
இப் பிரேரணை ஒட்டுமொத்தத்தில் தோல்வி கண்டுள்ள போதிலும் கூட்டு எதிரணி சில இலக்குகளை அடைந்திருக்கின்றது. குறிப்பாக நல்லாட்சிக்கு இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை ஆட்டங்காணச் செய்துள்ளது. சு.க.வில் இருந்த சிலரை தம்பக்கம் கவர்ந்திழுத்துள்ளது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் தப்பிப் பிழைத்துள்ளனர். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற நிலையில், தனித்து ஆட்சியமைப்பது, களைபிடுங்குவது பற்றி சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை ஐ.தே.க. இதன்மூலம் பெற்றுக் கொண்டுள்ளது. 
 
ஆனால், முஸ்லிம்களுக்கு கிடைத்த பலன் அல்லது இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் முஸ்லிம் எம்.பி.க்கள் எதைச் சாதித்திருக்கின்றார்கள், தமிழர்களும் சிங்களவர்களும் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திய போதும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ன கோரிக்கையை முன்வைத்து வாக்களித்திருக்கின்றார்கள். 
 
முஸ்லிம்களுக்கு கைசேதம்
இந்த நல்லாட்சி அரசாங்கமும் முஸ்லிம்கள் திருப்திப்படும் விதத்தில் ஆளவில்லை என்பது பொதுவான அபிப்பிராயமாகும். மிக முக்கியமாக ஜிந்தோட்டை, திகணை, அம்பாறை கலவரங்களில் சட்டம் நிலைநாட்டப்பட்ட விதம் குறித்து முஸ்லிம்களிடையே கடுமையான விமர்சனம் இருக்கின்றது. 
 
எனவே இனவாதத்தை கட்டுப்படுத்தல், முஸ்லிம்களின் எதிர்கால இருப்பு, மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் ஆய்வு என்ற பெயரிலான கையகப்படுத்தல்கள், இனமேலாதிக்கம், மாற்றாந்தாய் மனப்பாங்கு, இனப்பிரச்சினை தீர்வுத்திட்டத்திலும் உத்தேச அரசியலமைப்பிலும் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு வழங்கப்படல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிபந்தனைகளாக முன்வைத்து அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று அதற்கு கைமாறாக வாக்களித்திருக்கலாம். 
 
அல்லது குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் மனக் கிடைக்கைகளையாவது சரியாக வெளிப்படுத்தி, ‘இவ்வளவு கவலைகள் எமக்கிருந்தும் உங்களை காப்பாற்றுகின்றோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்பதை பிரதமருக்கு சொல்லாமல் சொல்லிவிட்டு, கையை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க கட்சித் தலைவர்களுக்கான உரை நேரத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் வழக்கம் போல மழுப்பலாக பேசி விட்டு அமர்ந்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பேசமாலேயே இருந்துவிட்டார். 
 
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களின் நியாயங்களுக்காக குரல்கொடுத்து வருகின்ற அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றது. திகண கலவரத்தையும் அவர்கள் அதற்கு காரணமாக காட்டியிருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை சுட்டிக்காட்டி ஜே.வி.பி. ரணிலுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றது என்றால், அறிக்கை மன்னர்களான முஸ்லிம் அரசியல்வாதிகளால் அது ஏன் இயலவில்லை?
 
சரி, ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்கவும் இன்றைய ஆட்சியும் சிறந்தது என்றாலும் குறைந்தபட்சம் இவ்வாறான விடயங்களை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டாமல், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை எழுத்துமூலம் பெறாமல், முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்திருக்கின்றார்கள் என்பது உன்னிப்பாக நோக்கப்படுகின்றது. 
 
எந்த உத்தரவாதத்தையும் பெறாமல், முஸ்லிம்களின் உணர்வுகளைக்கூகூட வெளிப்படுத்தாமல் பத்தோடு பதினொன்னறாக பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றமையாலேயே, ‘ஒரு குறிப்பிட்ட கட்சி பணத்திற்கு சோரம் போயுள்ளதாக’ விமல்வீரவன்ச போன்றோர் கூறுகின்ற கதைகள்  முஸ்லிம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நன்றிக்கடனுக்காக வாக்களித்திருக்கின்றார்களா? பட்டகடனுக்காக ஆதரவளித்திருக்கின்றார்களா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 
 
ஆனால்,; ‘நாங்கள் இந்தப் பிரேரணையை தோற்கடிக்கின்றோம், ஆனால் நீங்கள் இந்தந்த பிரச்சினைகளை தீர்த்து தர வேண்டும்’ என்று முஸ்லிம் கட்சிகளும் எம்.பி.களும் முறையாக பேரம் பேசியும், ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்ற வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு ஏன் இருக்கின்றது என்ற நியாயத்தைக் கூறியும், வெளிப்படையாக செயற்பட்டிருப்பார்கள் என்றால் இந்த நிலைமைகள் ஏற்பட்டிருக்காது. 
 
மனச்சாட்சிக்கு விரோதமாக செயற்பவடுவதும், சந்தர்ப்பங்களை தவற விடுவதும், அதற்கு பொய்யான கற்பிதங்களை கூறுவதும், கையும் களவுமாக மாட்டிக் கொண்டால் தலையில் அடித்து ஒப்பாரி வைப்பதும் முஸ்லிம் அரசியலின் வாடிக்கைதானே!
 
•ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 08.04.2018)