இலங்கை; முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக சர்வதேச மன்னிப்பு சபையால் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

முஸ்லிம்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடாக சர்வதேச மன்னிப்பு சபையால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த வருடகாலப்பகுதியில் பெளத்த தேசியவாதம் எழுச்சிப் பெற்று கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என  சர்தேச மன்னிப்பு சபை குறிப்பிடுகிறது. 

உலக மனித உரிமைகள் 2017 – 2018 அறிக்கையானது அண்மையில் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கையில் பெளத்த தேசியவாதம் கடந்த வருடமளவில் மிகவும் உக்கிர நிலையை அடைந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். அதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் தென்பகுதியிலுள்ள பூசா அகதி முகாமில் தங்கியிருந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தீவிர பெளத்த பிக்குகள் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பம் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. 

அவற்றுடன் தென்பகுதி நகரான காலியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளும், வியாபார தளங்களும் கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் தாக்குதலுக்குள்ளாகி தீக்கிரையானது.  

இவற்றுடன் கடந்த வருடம் முழுவதும் தெற்காசியாவிலே இந்தியா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சியா மக்களும், பங்களாதேஷில் இந்துக்களும் தாக்குதலுக்குள்ளாகினர். இத்தாக்குதல் குறித்து அரசாங்கங்கள் பாதுகாப்பளிக்க தவறிவிட்டன அல்லது இவற்றை கண்டுகொள்ளாமலிருந்தன. 

இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டு பிரச்சினையில் இறந்தவர்களுக்காக நினைவு தூபி அமைப்பது, பாதுகாப்பு படையினரால் கடந்த காலத்தில் தடை செய்யப்பட்டது. மனித உரிமை பாதுகாவலர்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தனர். மனித உரிமை பெண் பாதுகாவலர்கள் நாட்டின் வடகிழக்கில் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டும் பாலியல் தொந்தரவுகளுக்குட்பட்டும் வந்துள்ளனர் எனவும் அவ்அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.