பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்

பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்து அங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் சுமுக வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஊவா மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரேம சாந்த அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

எந்த விதமான காரணங்களுமின்றி கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர்களின் செயல்கள் மேலும் எல்லை மீறி இன மோதலுக்கு  வழி வகுக்கும் என பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் சுட்டிக்காடியுள்ளார்.

அமைச்சரின் கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரை பொலிசார்  ஏற்கனவே கைதுசெய்துள்ளதாகவும் ஏனையவர்களையும் கைதுசெய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  உறுதியளித்தார்.அத்துடன் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி அமைதியை நிலைநாட்ட மேலதிக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை முஸ்லிம்கள் மீதான இந்த தாக்குதல் தொடர்பில் மொனராகலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜித் விஜித முனி செய்சா உடனும் அமைச்சர் தொடர்புகொண்டார்.

பிபிலை நகரம் மற்றும் கொடிகட்டுவ மிஸ்பா பள்ளிவாசல்களின் தலைவரும் வர்த்தகருமான சமுகசேவையாளர் ஒரு மாரடைப்பினால் காலமான செய்தியறிந்த, பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர்  நேற்று வெள்ளிக்கிழமை வெடிகொளுத்தி ஆரவாரம் செய்ததோடு பிபில நகர முஸ்லிம் கடைகளுக்குள் வேண்டுமென்றே புகுந்து அட்டகாசம் புரிந்திருந்தனர்  இவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமுற்றதுடன் ஒருவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது  குறிப்பிடத்தக்கது.