Mohamed Nizous
80களின் தொடக்கத்தில்
இருந்த தொடர்பு முறை
தம்பிமார் அறிந்தால்
நம்ப மாட்டார்கள்.
கட்டாரில் வேலை செய்ய
கடல் தாண்டிப் போனமகன்
ஆபத்து ஏதுமின்றி
அங்கு போய்ச் சேர்ந்தாரென்று
செய்தி தபாலில் வர
செல்லும் ரெண்டு வாரம்.
ஓரத்தில் கலர் கலராய்
உள்ள எயார் மெய்லை
ஊருக்குள் கொண்டு வரும்
ஆரைப் பற்றை போஸ்ட்மேனை
தூரத்தில் கண்டதுமே
துள்ளி ஓடிச் சென்று
எம்புள்ள கடிதம்
இருக்காப்பா எனக் கேட்டு
அன்புள்ள தாய்மார்கள்
ஆதங்கப் படுவார்கள்
ஊரு விட்டு ஊரு சென்று
உழைக்கின்ற வாப்பாமார்
சேருகின்ற பணத்தை
செல்லங்களுக்கு அனுப்ப
போஸ்ட் ஒபிஸ் சென்று
போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார்.
மணி ஓடர் கொண்டு வரும்
மணி ஓசை கேட்டு
குடும்பத்தில் சந்தோசம்
குற்றாலமாய்க் கொட்டும்.
தந்தி ஒன்று கண்டாலே
தலை சுற்றும் மனம் பதறும்.
யாரு மெளத்தோ !
என்ன பிரச்சினையோ!
அவசரமாய் செய்தியினை
அனுப்பி இருக்காங்க.
அண்ண நீங்களே
அதப் படிச்சு சொல்லுங்க
தபால் கார அண்ணயிடம்
தவிப்போடு கூற
ஏம்மா பயப்படுறீங்க.
இண்டவியுக்கு வா என்று
பிள்ளைக்கு வந்து இருக்கு
பீயோன் பால் வார்ப்பார்.
போணிருக்கும் வீடு என்றால்
பொதுவாகப் பெரும் வீடு.
காண்பதற்கே அரிது
கதைப்பதென்றால் கனவு.
இருபத்தைந்து வருடங்கள்
இருக்கின்றேன் டெலிகொம்மில்.
ஏ. எல். எடுக்கும் வரை
இவன் போணைத் தொடவேயில்லை.
பொழுது போகாத
பொடியன்களும் பிள்ளைகளும்
எழுதுவார் கடிதங்கள்
இதன் பெயர் பேனா நட்பு.
பேனா நட்பு சில நேரம்
பே நாய் எனும் ஏச்சில்
வீணாய் முடியும்
ஆனாலும் பலர் தொடர்வார்
இருக்கின்ற ரேடியோவில்
எப் எம் இயங்காது.
சிற்றலை வரிசையிலே
சற்றுத் தெளிவின்றி
இலங்கை வானொலி
இல்லங்களில் ஒலிக்கும்
தினபதி, கேசரி
தினமும் செய்தி தரும்.
சிந்தாமணி, மஞ்சரி
சிறப்பிதழ் ஞாயிறில்.
விகடன் , குமுதம்
வேண்டிப் படிக்க மாட்டார்.
வாசிக சாலையில்
வாசித்து முடிப்பார்.
தொலைக்காட்சி லேசாக
தூறத் தொடங்கியது.
ரூபவாஹினிக் கொக்கை
ரொம்ப நேரம் காட்டிய பின்
புள்ளிகள் மத்தியில்
வெள்ளை கருப்பு செய்தி வரும்.
இப்போது எல்லாமே
இமீடியற்றாய் கிடைக்கிறது
ஆனாலும் அன்று
ஆவலாய் கவர் உடைத்து
வாசித்த வாசித்து
வரிகளைப் பாடமிட்டு
நேசித்த அந்த சுகம்
நெற்றில் கிடைக்கவில்லை…!