கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பிய நாசா

நாசா கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க கோரி செய்தி ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அறிவியல் அல்லது  கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை படித்த நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 9 வயது மாணவன் ஜக் டேவிஸ் அந்த பதவிக்கு விண்ணப்பித்து நாசா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளான். அவன் எழுதிய கடிதத்தில், ’எனக்கு  9 வயது ஆகிறது. ஆனால் நான் இந்த பதவிக்கு தகுதியானவன் என நம்புகிறேன். ஏனென்றால் நான் விண்வெளி மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் குறித்த படங்களை அதிகமாக பார்ப்பேன். மேலும் என்னை என சகோதரி வேற்று கிரக வாசி என அழைப்பாள். எனவே எனக்கு வேலை தருமாறு குறிப்பிட்டிருந்தான். மேலும் அந்த கடிதத்தில் அவன் கையோப்பத்திற்கு கீழே விண்வெளியின் பாதுகாவலன் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ஜக்கின் ஆர்வத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பதவி மிகவும் முக்கியமான பதவி. அதற்கு நாங்கள் நல்ல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம். அதனால் நீங்கள் பள்ளியில் நன்றாக படியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் நாசாவில் வேலை செய்ய எங்கள் வாழ்த்துக்கள் என நாசா கோளியல் இயக்குநர் ஜிம் கிரீன் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.