அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவில் என்ன நடக்கின்றதென தெரியாமல் இருந்தாரா?

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

கிண்ணியாவை உலுக்கி பார்க்கும் விடயமாக டெங்கு நோயானது மாறியுள்ளது.கள்ளன் சென்ற பின் நாய் குரைத்த கதையாக இப் பிரச்சினை இரு வாரங்களுக்கும் மேலாக சூடு பிடித்த நிலையில் உள்ள போதும் நேற்று செவ்வாய்க் கிழமை தான்,தனது உறுப்பினர்களை களத்தில் இறங்கி செயற்படுமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார்.இத்தனை நாளும் அமைச்சர் ஹக்கீம் கிண்ணியாவில் என்ன நடக்கின்றதென தெரியாமல் இருந்தாரா? 12 மரணங்களின் பின் தான் அமைச்சர் ஹக்கீமிற்கு ஞானம் பிறந்ததா?

களத்தில் இல்லாத ஒருவரை தான் களத்தில் இறங்கி செயற்படுங்கள் என பணிப்புரை விடுக்க முடியும்.தனது பணிப்புரை மூலம் அமைச்சர் ஹக்கீம் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இவ் விடயத்தில் களத்தில் இறங்கி செயற்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்.இன்று மு.காவில் மத்திய சுகாதார பிரதி அமைச்சர்,மாகாண சுகாதார அமைச்சர்,முதலமைச்சர் ஆகியோர் உள்ளனர்.இந் நிலையில் இவர்கள் இத்தனை காலம் தாழ்த்தி இவ்விடயத்தில் கிண்ணியா விடயத்தில் இத்தனை பொடு போக்காக இருந்ததன் காரணம் என்ன? கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம் மக்கள் மு.காவை ஆதரிக்காததன் பழி வாங்கலோ?

சுகாதார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புடைய மு.கா இது தனது விடயமென முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டும்.அப்படி செயற்படாமை மிகவும் கண்டிக்கத்தக்கது.அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை சேவை மன்னனாக புகழ்வதில் அலாதிப் பிரியம் கொண்டவர்.தனது ஊரில் இப்படி ஒரு பிரச்சினை சென்று கொண்டிருக்க போது பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஒரு அறிக்கை கூட விடாமல் பொடு போக்காக செயற்படுகிறார்.இதனால் தான் என்னவோ இந்த மக்கள் இவரை இம் முறை பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திருந்தனர்.

தற்போது இவ்விடயத்தில் பலரதும் சுட்டிக் காட்டலுக்கு அமைவாக மத்திய அமைச்சு நேரடியாக களம் இறங்குகிறது.இதில் நனைந்து கொண்டு பெயர் எடுக்க மு.கா முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதனை நேரடியாக செய்யும் அரசியல் அதிகாரம் மு.காவிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.ஒரு நோயை துளிர் விடும் போது கிள்ளி எறியாமல் மரமாகிய பிறகு வெட்டி எறிவது கடினமாகும்.

சிந்தியுங்கள் சகோதரர்களே!