பொதுத் தளம் ஒன்றில் உரையாடுவதற்காக ஒன்று சேருமாறு அன்பாய் அழைக்கின்றேன் : அதா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,

                                      வரலாற்றுத் தேவைக்காய் ஒன்று கூடுவோம்

உலமாக்களே, தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மூத்த போராளிகளே, மற்றும் அவரது முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கையில் இன்று வரை உறுதியாக உள்ள போராளிகளே, நமது சமூகத்தின் புத்திஜீவிகளே, எதிர்கால தலைவர்களாம் இளைஞர்களே, அரசியல் செயற்பாட்டாளர்களே, சமூக அக்கறையுடையவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்,

1987ம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் மீது அடிமைச்சாசனம் எழுதப்பட்டபோது நமக்கென்றொரு  கட்சியோ  தனித்துவமான அரசியல் குரலோ இருக்கவில்லை.

தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மறைவின் பின் 2002ம் ஆண்டு நோர்வே அனுசரணையில் இடம்பெற்ற முஸ்லிம்களை காவுகொள்ள எத்தனித்த ஒப்பந்தத்தின்போது நமக்கென்று கட்சியிருந்தது. அது பலமாகவுமிருந்தது. ஆட்சிக்கு முட்டுக்குக் கொடுக்கும் அளவிற்கு அரசியல் பலமும் இருந்தது. அவ்வொப்பந்தந்தின்போது முஸ்லிம் சமூகத்தை ஒரு சிறு குழுவாக சித்தரித்து முத்திரையிட்டு நமக்கு மீண்டும் ஒரு அடிமைச்சாசனம் எழுதப்பட்டது. அதன்போது நாம் உருவாக்கிய கட்சியின் தலைமை இந்த நிகழ்ச்சிக்கும் அதன் நடத்துனர்களுக்கும் உடந்தையாக இருந்தது. இதனால் கட்சியிலிருந்த அஷ்ரஃபின் போராளிகளுக்கும் ஹக்கீம் காங்கிரஸ்காரர்களுக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் யாப்பும் கட்டுப்பாடும் வெளி சக்திகளின் தலைவர் மீதான அழுத்தங்களும் காரணமாக கட்சிக்குள்ளிருந்து கொண்டு நமது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முடியாமல் போனது. அதனாலேயே நாம் வளர்த்த கட்சியை விட்டு வெளியேறி தனி வழியில் பயணித்து தலைவர் அஷ்ரஃப் அவர்களின் பணியை அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சென்று சமூகத்திற்கு தேவையானவைகளில் பிரதானமானவைகளை சாதிக்க முடியுமாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

நாட்டில் ஏலவே நடைபெற்றவைகளைப்போன்று முக்கியமான அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ள மற்றுமொரு வரலாற்று காலத்தில் நாம் இருப்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.  இத்தருணத்தில் எல்லாக் காலங்களை விடவும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கிமின் அரசியல் நடவடிக்கைள் மீது மக்கள் அதிருப்தியுற்று அவரை நிராகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. இனத்தீர்வு விடயத்தில் றஊப் ஹக்கிமினால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையமாட்டது என்று புத்திஜீவிகளும் அரசியல் ஆர்வலர்களும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவருக்கும் புறச்சக்திகளுக்குமிடையிலான தொடர்புகள் பற்றி தற்போது பகிரங்கமாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது இதனை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. 

இத்தருணத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு மற்றும் அரசியலமைப்பு மாற்றம், அதிகாரப் பகிர்வு,தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆழமாக சிந்திக்கப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் முஸ்லீம்களும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏனைய சமூகங்களுடன் சேர்ந்து இந்நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கான இறுதித் தீர்மானங்கள் எட்டப்படவேண்டியுள்ள வரலாற்று தேவையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். 

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை, இலங்கை தேசத்தின் ஐக்கியம் இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை அடிப்படைகளாக வைத்து தலைவர் அஷ்ரஃப் அவர்களினால் தொடக்கி வைக்கப்பட்ட சமூக விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள், மூத்த போராளிகள் மற்றும் அவரது முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கையில் இன்று வரை உறுதியாக உள்ள போராளிகளும் ஆகிய நம்மீதும் சமகாலத்தில் வாழ்கின்ற புத்தி ஜீவிகள் சமூக அமைப்புகள் ஆர்வலர்கள் உலமாக்கள் இளைஞர்கள் மீதும் இதற்காக செயற்படவேண்டிய தார்மீகப் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. 

மேலும் சூழ்ச்சிகளுக்குள் சிக்க இருக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின்  தலைவிதியை தீர்மானிக்கவேண்டியது அவசரத்தேவையாகவும் உள்ளதனையும் ஏற்றுக்கொள்வீர்கள். தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மூத்தபோராளிகளுள் ஒருவன் என்ற வகையிலும் அவருடைய கொள்கையின் ஊடாக 30 வருடங்கள் அரசியல் செய்கின்றவன் என்ற அடிப்படையிலும் இப்பணியை எனது மண்ணாம் கிழக்கு மாகாணத்திலிருந்து தொடக்கிவைக்கலாம் என நினைக்கிறேன்.

இந்த முயற்சியின் மூலம் நமது சகோதர சமூகமான தமிழ் மக்களின் அபிலாஷைகளை கேட்பதுவும் நமது அபிலாஷைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதுவும் தேவைப்படின் இரண்டு சமூகங்களினதும்; அபிலாஷைகளையும் ஒருமித்து பெரும்பான்மை சமூகத்துக்கு எத்திவைப்பதற்குமான கடப்பாடு நம் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இப்பணியின் முதற்கட்டமாக தலைவர் அஸ்ரப் அவர்களோடு சமூக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டு இயங்கிய கிழக்கு மாகாணத்தின் மூத்த போராளிகள் அவரது முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கையில் இன்று வரை உறுதியாக உள்ள போராளிகள் அனைவரும் சமூகத்தின் நன்மைக்காக கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்து கூடிப் பேசவேண்டிய கட்டாய நிலை தோன்றியுள்ளது.

ஆதலால், தலைவர் அஸ்ரப் அவர்களோடு இருந்த மூத்த போராளிகள், முன்னோடிகளையும் அவரது முஸ்லிம் சமூகம் தொடர்பான கொள்கையில் இன்று வரை உறுதியாக உள்ள போராளிகளையும் சமகால புத்திஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் சமூக அக்கறையுடையோர் பிரதானமாக உலமாக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் பொதுத் தளம் ஒன்றில் உரையாடுவதற்காக ஒன்று சேருமாறு அன்பாய் அழைக்கின்றேன். 

உங்களுக்கான அழைப்பிதழ் கிடைத்தவுடன் சமூக நலன் கருதி கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

மேலதிக தொடர்புகளுக்கு      
0772289960 (மூத்த போராளி யூ. ஏல். உவைஸ்-)
0773178783 (சட்டத்தரணி எம். எம். பஹீஜ்) 
0766002202 (முன்னாள் மாநகரசபை உறுப்பினர்ஏ.ஜி அஸ்மி)

நன்றி 
அஷ்ரஃபின் மூத்தபோராளிகளுள் ஒருவன்
ஏ.எல்.எம்.அதாஉல்லா