தமிழ் மக்களை அழித்து விடலாமென நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும்: இரா.சம்பந்தன்

தமிழ் மக்கள் பழைமையானதும் ஆழமானதுமான வரலாற்றினைக் கொண்டவர்கள். அவர்களை அழித்து விடலாமென நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும். 

நாட்டில் பல பகுதிகளிலும் வாழும் சகல தமிழ் மக்களினதும் இறைமையை பாதுகாக்கும் வகையில் நியாயமான தீர்வு அமையவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலிறுத்தினார். 

அதேநேரம் இந்த செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். 

விசுவாசத்தை மையப்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். 

கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துமகளிர் கல்லூரியின் 30வது அகவையை முன்ணிட்டு இராமகிருஷ்னண் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நர்த்தன ஒளி என்ற இசை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

இன்று தமிழ் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் காலமாகும். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் பார்த்துக்கொண்டுள்ளோம். 

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு எம்மாலான சகல உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம். அதனால் எமது எதிர்பார்ப்பு அதாவது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு போன்று நியாயமானதொரு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதனை நாம் ஏற்றுக்கொள்வோம். 

மாறாக நியாயமற்ற தீர்வு கிடைக்கப்பெறுமாயின் அதனை ஏற்கமாட்டோம். 

தமிழ் மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அரசியல் ஒருபுறமிருக்க எமது மக்களும் அவர்களின் பிள்ளைகளும் எமது கலாசாரத்தினை பின்பற்றி வாழ வேண்டிய சூழல் உருவாக வேண்டும். 

அதற்கு சகல பகுதிகளிலும் இருக்கின்ற இப்பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.நெருக்கடியுடன் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் இன்று இந்தியா அவுஸ்திரேலியா, ஐரோப்பா, உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழ்கின்றனர். 

அவர்கள் இங்கிருந்து சென்றவர்கள் எனவே அவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 

கல்வியின் பெறுமதியினை அவர்களும் அவர்களுடைய பெற்றோரும் உணர்ந்து கொண்டுள்ளனர். அதேபோல் அவர்கள் இந்நாட்டினை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு இந்த நாடும் உரியது என்ற வகையில் அவர்களுடனான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியவையாகும்.

அதனால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.அந்த தொடர்பானது எமது கலாசாரத்தினை வளர்க்க உதவும். நாம் பழமையான சரித்திரம் கொண்ட தமிழர்கள். ஆழமான வரலாறு எமக்கு இருக்கின்றது. 

அதனை சகலரும் உணர்நது கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு முதல் தமிழர்களான நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

நாம் எமது இறைமையை அந்நியர்களுக்கு கொடுத்தவர்கள் அதனால் நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களின் இறைமையை பாதுக்காக்கின்ற வகையில் எமக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். 

அவ்வாறான ஒரு தீர்வு கிட்டும் பட்சத்தில் மாத்திரமே நாட்டில் நிரந்தரமான சமாதானம் உருவாகும். 

அதேநேரம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ள கல்வியின் அடிப்படையிலான எழுச்சி தமிழர் வாழும் பகுதிகளான மலையகம்,வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஏற்பட வேண்டும் என்றார்.