பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமை நன்மை பயக்குமா ?

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விடயமாகும்.

பாமர மக்களின் பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களுடன் குறித்த விடயம் தொடர்பற்றது என்றாலும், உலக நாடுகள் இணைந்த பொருளாதார அணுகுமுறை இருக்கும் காலத்தில், இம்மாதிரியான அரசியல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கம் வகித்த போதும் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலக அரங்கில் கவனிக்கத்தக்கவை.

ஆனால், கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றிய வணிக நடைமுறைகளில் ஒன்றாக செயல்படுத்த முன்வந்ததால், பெரிய கூட்டியக்கமாக மாற்றம் கண்டது.

அதற்கு அடுத்த மாற்றமாக, ‘யூரோ’ நாணயமும் பாவனைக்கு வந்தது. எனினும், பிரித்தானியா தனது நாட்டு நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங்கை இழக்காமல் கவனமாக இருந்தது.

தற்போது, பொருளாதார வளர்ச்சி அதிகம் இல்லாததாலும், அகதிகளின் வரவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பிரச்னையாக மாற்றம் கண்டுள்ளதாலும், ஒருவகையில் தனது தன்மையைக் பாதுகாத்துகொள்ள இந்த விலகல் முடிவு எடுக்கப்பட்டது.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட அதனுடன் வர்த்தக உறவு கொண்ட அனைத்து நாடுகளுக்கும், பிரித்தானியாவின் முடிவு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

பிரித்தானியா தனியாக தன் பொருளாதார கட்டமைப்பை உடனே உருவாக்கும் என்று கூற முடியாது. அதற்கு ஏற்ப, சில சட்ட திருத்தங்களை அமுலாக்கி, அதற்கு பின்னரே செயற்பட வேண்டும்.

ஆகையினால் தான், இரு ஆண்டுகள் காத்திருக்காமல், அதற்கான வழிகளை பிரித்தானியா மேற்கொள்ள ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆகவே ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து உடனடியாக விலக அதற்கு நிர்பந்தம் தரப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில், நிரந்தர உறுப்பினர், அணுசக்தி திறன் கொண்ட வளர்ந்த நாடு என்பதும், அமெரிக்காவின் நிரந்தர வர்த்தக மற்றும் ஜனநாயக உணர்வுடன் தொடர்புடையது என்பதும் பிரித்தானியாவுக்கு வலுவாகும்.

அதைப் பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனியாக பிரித்தானியா பிரிந்தாலும், அதனுடன் உள்ள அமெரிக்காவின் உறவு தொடரும் என கருத்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதை அந்த நாட்டு பிரதமர் கெமரூன், முன்னாள் பிரதமர் ஜான்மேஜர், தொழிலாளர் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பிய போதும் அது பொது வாக்கெடுப்பில் பிரதிபலிக்கவில்லை.

விளைவாக, பிரதமர் டேவிட் கெமரூனும், பதவி விலகுகிறார். அடுத்த பிரதமராக வருபவர், தற்போது மக்கள் வழங்கிய பிரித்தானியா தனித்திருக்கும் முடிவை’ இழுத்தடிக்காமல், அமுல்படுத்தியாக வேண்டும்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின், வரவு செலவு திட்ட அளவு, 2015ம் ஆண்டு 145 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இதில் ஜேர்மனி, 21 வீதம், பிரான்ஸ், 15 வீதம், பிரித்தானியா 12 வீதம் ஆகும். இந்நிலையில், குறித்த இரு நாடுகளையும் தாண்டி, தனித்துவ அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன், செயல்பட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை வளர்க்க முடியுமா என்பது விடை தெரியாத வினா?

அதேபோல ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா நகரங்களில் தங்கள் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தை சீராக்காத அரசை எதிர்த்தும், கலாச்சார அடிப்படைகளை தகர்க்கும் அபாய சூழ்நிலைகளை எதிர்பார்த்தும், இம்முடிவு மக்களை இட்டுச் சென்றதோ என்ற பேச்சு தற்போது வலுவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது