பஸில் ராஜபக்ஸவின் சில தவறான செயற்பாடுகளே மஹிந்தவின் தோல்விக்கு காரணம் : எஸ்.பி !

S.B.Disanayake
தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு பஸில் ராஜபக்ஸ தான் காரணம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் கடந்த காலங்களின் போது மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றன. அந்த இரண்டு தேர்தல்களிலும் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியையே தழுவினார். 

இதற்கு காரணம் பஸில் ராஜபக்ஸவின் சில தவறான செயற்பாடுகளே என நாமல் ராஜபக்ஸ என்னிடமும் சில கட்சி உறுப்பினர்களிடமும் தெரிவித்ததாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி பஸில் ராஜபக்ஸ எந்தக் கட்சியின் பக்கம் நின்று போட்டியிட்டாலும் அந்தக் கட்சி நிச்சயம் வெற்றியடையாது, தோல்வியையே அடையும். என தெரிவித்தார். 

இந்தக் காலக்கட்டத்தில் சமுர்த்தி தொடர்பாக பல கருத்துக்கள் பரவலாக பேசப்படுகின்றன. சில போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதற்குக் காரணம், சிலர் அரசியல் இலாபம் கருதி சமுர்த்தி கொடுப்பனவுகளை இடைநிறுத்தப் போவதாக சமுர்த்தி பெறும் மக்களிடம் போலிப் பிரச்சாரங்களை செய்துள்ளமையே ஆகும் என  சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசாங்கம் சமுர்த்திக் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொள்ளாது. கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் சமுர்த்திக் கொடுப்பணவுகளை 300% தால் அதிகரித்துள்ளது. 

தற்சமயம் சமுர்த்தி பெறும் மக்களினதும், சமுர்த்தி பெற தகுதியுடைய மக்களினதும் தகவல்களைத் திரட்டி அறிக்கை ஒன்றை தயாரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. 

இந்த செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலேயே சில அரசியல்வாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை செய்வதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.