தாஜுதீன் கொலை : CCTV வீடியோக்கள் இன்னும் பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை !

thajudeen
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.ரீ.வி. வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்தும் இன்னும் அவை பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது நேற்று வழக்கு விசாரணையின் போது வெளியாகியுள்ளது.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி 7ம் திகதி இடம்பெற்ற போது கொலையுடன் தொடர்புள்ள வீடியோக்களை வெளிநாட்டு ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மேற்படி வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. 

நீதிமன்றம் சி.ஐ.டிக்கு உத்தரவு வழங்கி ஒரு மாதமாகியும் குறித்த வீடியோக்கள் வெளிநாட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்படாமல் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது இதன் போது அம்பலமாகியுள்ளது. 

2012 மே 17ம் திகதி இடம்பெற்ற வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பாக சி.ஐ.டி. மேற்கொண்ட விசாரணை மூலம் கிடைத்த சீ.சீ.ரீ.வி. கமரா வீடியோக்கள் கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான அறிக்கையை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி 4ம் திகதி நீதிமன்றத்திற்கு வழங்கியிருந்தது. 

இந்த வீடியோக்களை மேலதிக ஆய்விற்காக அமெரிக்க எப்.பி.ஐ. மற்றும் கனடா மெட்ரோ பொலிடன் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்புமாறு கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு பரிந்துரை செய்திருந்தது. 

இதன்படி குறித்த வீடியோக்களை, கொழும்பு பல்கலைக்கழகம் பரிந்துரை செய்த நிறுவனங்களுக்கோ அல்லது அதனை விட சிறந்த வேறு நிறுவனத்திற்கோ வழங்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 07ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் அவற்றை சி.ஐ.டி. இதுவரை பெறாததால் அவற்றை நீதிமன்ற பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. 

இந்த வீடியோக்கள் இரவு நேர மின் விளக்கு வெளிச்சமும், வாகன வெளிச்சம் காரணமாக தெளிவாக இல்லை என கொழும்பு பல்கலைக்கழகம் தமது அறிக்கையில் ஏற்கெனவே கூறியிருந்தது. 

தாஜுதீன் கொலை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. 

விசாரணைகளை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது தெரிந்ததே.