சென்னையில் முகாம் அமைக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு !

isis-flag

பெங்களூரில் கடந்த மாதம் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

சிரியா–ஈராக்கில் உருவான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாரீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.

அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே டெல்லியில் கடந்த மாதம் 26–ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது பெங்களூர் உள்பட நாடு முழுவதும் ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 13 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இருவரும் பெங்களூரில் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார்கள்.

ஒருவர் பெயர் ஆசிப் அலி என்ற அர்மான் சானி. 21 வயது இளைஞரான இவர் கோவை உக்கடத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் அப்துல் அஜத் என்ற சுலைமான். இவருக்கு வயது 46. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்.

பிடிபட்ட 13 பேரும் சிரியாவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தனர். இந்தியாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு இளைஞர்களை தேர்வு செய்தல், பணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்காக நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் ரகசியமாக ஐ.எஸ். அமைப்பின் கிளைகளையும், முகாம்களையும் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். பெங்களூரில் பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் சென்னையில் முகாம் அமைக்க திட்டமிட்டு இருந்தனர். கடைசி நேரத்தில் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக டெல்லி புலனாய்வு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைப் போல் மும்பை, டெல்லி, லக்னோ, பெங்களூரு, அலகாபாத், மேற்கு வங்காளம், ஐதராபாத், குஜராத் ஆகிய இடங்களிலும் ஐ.எஸ். அமைப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர். 13 பேரும் பிடிபட்டதால் அவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 13 தீவிரவாதிகளையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து அவர்களது எதிர்கால திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தளம் அமைத்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக வீடியோ ஆதாரங்கள் வெளியானது. இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. எனவே பிடிபட்ட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

பிடிபட்ட கோவை இளைஞரான ஆசிப்அலி பிளஸ்-2 படித்ததும் பெற்றோருடன் பெங்களூருக்கு சென்று குடியேறினார். அங்கு மேல்படிப்பு படித்தார். தற்போது ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இதே போல் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் அகத் சென்னை கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த பின்பு பெங்களூர் சென்று பணியாற்றி வந்தார். அவரது பெற்றோர் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருகிறார்கள். இருவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மீதான பற்று காரணமாக அதில் சேர்ந்தனர்.

இருவரும் இணையதளம் வழியாக ஐ.எஸ். இயக்கத்தை வழி நடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது.