கிரிக்கெட்டின் இப்படியும் ஒரு சாதனை; அனைத்து அறிமுகப் போட்டிகளில் அவுஸ்திரேலியா வெற்றி !

australia-cricket

 கிரிக்கெட் ஆரம்பமாகி 138 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கிரிக்கெட்டை கண்டுபிடித்தது இங்கிலாந்து என்றாலும் இந்த போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

1965 முதல் 1980 வரை மேற்கிந்திய அணி கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. மற்ற காலங்களில் அவுஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது.

முதன்முதலாக 1877 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி டெஸ்ட் போட்டி அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டது.
இந்த முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. அத்துடன் முதன் முதலாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையும் அவுஸ்திரேலியாவையே சாரும்.

அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளே மோதின. இந்த போட்டி 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்பின் ஒருநாள் போட்டி பகல்- இரவு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டி 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடத்தப்பட்டது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்பின் 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி டி20 போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அவுஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது அடிலெய்டில் (2015, நவம்பர் 27) பகல்-இரவு டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகப்படுத்தப்படும் போட்டிகள் அனைத்திலும் அவுஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது.