போராடி வெற்றிப் பெற்றது நியூசிலாந்து அணி

உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஹோக்லாந்தில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டால் போராடி வெற்றி பெற்றது.

நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய ஹெடின் அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றதுடன்  வோர்னர் 34 ஓட்டங்களையும் , வெட்சன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தைப்  பெற்றுக்கொடுத்த போதிலும் அதனைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் இலகுவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய போல்ட் 10 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுக்களையும் சவுதி மற்றும் டேனியல் விட்டோரி தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

152 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மெக்கலம் அதிரடியாக 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் பிரகாசிக்கத் தவரினர். இறுதிவரை போராடிய வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 9 ஓவர்களில் 28 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

எனினும் வில்லியம்சனின் உதவியோடு 23.1 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-