அபு அலா
எமது நாட்டை சீரழித்த இலஞ்சம், ஊழல், வீண்விரயம், இனவாதம், ஏகாதிபத்திய குடும்ப ஆட்சி ஆகியவற்றை நாங்களும், நீங்களும் சேர்ந்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோற்கடித்தோம். தற்போது நாம் கட்சி, நிறம், சமய பேதங்களை மறந்து எமது கிராமத்தை முன்னெற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான தயா கமகே தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு கடற்கரையோரம் இன்று மதியம் (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடரந்தும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 60 மாத திட்ட சிந்தனையில் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு மற்றும் முதலீட்டு வலைய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மிகக் கூடுதலான நன்மைகளை திகாமடுல்ல மாவட்டத்துக்கு கொண்டுவரவும், அம்பாறை மாவட்டத்தை இலங்கையின் இரண்டாவது பொருளாதார வலயமாக மாற்றியமைக்கவும் வாக்குறுதியளிக்கின்றேன். அத்துடன் எமது அம்பாறை மாவட்டத்துக்கு 1 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் உறுதியளிக்கின்றேன்.
எமது அம்பாறை மாவட்டத்தில் அரசாங்க காணிகளில் வசிக்கும் அல்லது வியாபாரம் நடவடிக்கைகளில் ஈடுபடும் அணைவருக்கும் 2016 ஆம் ஆண்டில் சகலருக்கும் நிரந்தர காணி உறுதியைப் பெற்றுக்கொடுக்கவும், விவசாயங்களுக்குத் தேவையான நீர் வசதிகளையும், நெல்லை கொள்வனவு செய்தல் மற்றும் ஏனைய விவசாய விளைபொருட்களுக்காக நிலையான உ யர்ந்த விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு எல்லா பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட 25 தேசிய பாடசாலைகளை அமைக்கவும், எல்லோருடைய மின்சாரத் தேவையையும் 100 வீதம் பூர்த்தி செய்து நிறைவேற்றிக் கொடுப்பேன்.
தரமற்ற போலி வீதி அபிவிருத்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திட்டமிடப்பட்ட வினைத்திறன்மிக்க ஒரு வீதி அபிவிருத்தி முறைமையை எமது மாவட்டத்துக்கு கொண்டு வருவதுடன் மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத பாதையை கரையோர பிரதேச வழியூடாக பொத்துவில் வரை கொண்டு செல்ல சகல நடவடிக்கைகளையும் எடுத்து பொத்துவிலில் இருந்து அம்பாறை, மகஒயா, தெஹியத்த கண்டிய ஊடாக பொலன்னறுவை மட்டக்களப்பு புகையிரத பாதையுடன் இணைக்க சகல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளளேன்.
இந்த அபிவிருத்தி திட்டங்கள் யாவும் நிதர்சனமாகக் காண்பதற்கு எதிர்வரும் ஒக்கஸ்ட் மாதம் 17 ஆம் திகதி எமது பெற்றியை பலப்படுத்திச் செல்ல அதற்கான ஆதரவைத் தருமாறு வேண்டுகின்றேன் என்றார்.