பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபரில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 2,85,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்றுவரை 22 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் மேலும் 24 பேரது உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதனால், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதுதவிர வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.