இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ஓட்டங்களைக் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 215 ஓட்டங்களையும், கிறிஸ் ரோஜர்ஸ் 173 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 3 ஆவது நாளில் தேனீர் இடைவேளைக்கு பிறகு 90.1 ஓவர்களில் 312 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பாலோ-ஒன்னை (367 ரன்கள்) தவிர்க்காத நிலையிலும், இங்கிலாந்து அணிக்கு பாலோ ஒன் கொடுக்காமல் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் தனது அணி 2 ஆவது இன்னிங்ஸை ஆடும் என்று அறிவித்தார்.
இதனையடுத்து 254 ஒட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கிறிஸ் ரோஜர்ஸ் 44 ஓட்டங்களுடனும், டேவிட் வார்னர் 60 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4 ஆவது ஆட்டம் இடம்பெற்றது. கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். கிறிஸ் ரோஜர்ஸ் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற ஸ்மித் களமிறங்கினார்.
நிலைத்து நின்று ஆடிய டேவிட் வோர்னர் 83 ஓட்டங்களுடன் மொயின் அலி பந்து வீச்சில் குக்கின் பிடியில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவன் ஸ்மித் 58 ஓட்டங்களுடன் மொயின் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இனிங்ஸில் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்ததுடன், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 509 ரன்களை நிர்ணயித்தது.
அணித்தலைவர் மைக்கல் கிளார்க் 32 ஓட்டங்களுடனும், மிச்செல் மார்ஷ் 27 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் 509 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.
எனினும் அவர்கள் எதிர்பார்த்தது போல சிறப்பான ஆரம்பம் அமையவில்லை. தொடக்க வீரர்களான அடம் லைத் 7 ஓட்டங்களுடனும், தலைவர் குக் 11 ஓட்டங்களுடனும், கரி பலன்ஸ் 14 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினார்கள்.
தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2 ஆவது இனிங்ஸில் 37 ஓவர்களில் 103 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஜோன்சன் 3 விக்கெட்டுக்களையும், ஹசில்வுட் மற்றும் நதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் போட்டி தொடரில் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பேர்மிங்காமில் வருகிற 29 அம் திகதி தொடங்குகிறது.