பாரூக் சிகான்
உண்மையான, நேர்மையான மனிதநேயம் தான் எமது அரசியலின் மூலதனம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆறுகால்மடம், அரசடி ஞானவைரவர் கோவிலுக்கு அருகாமையில்; இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது, இங்கு வருகை தந்திருக்கும் உங்களில் பலருக்கு நிரந்தரக் காணிகளோ, காணி உறுதிகளோ இல்லாத நிலையில் வாழ்வாதாரம் மற்றும் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாத நிலை இருந்து வருகிறது.
அந்த வகையில், மக்களாகிய நீங்கள் எமக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் பலம் தருகின்ற போது உங்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் யாவும் உரிய கால்ததில் தீர்த்து வைக்கப்படும்.
அதுமட்டுமன்றி உங்களுக்கு வளமானதொரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன், வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் விஸ்திரப்படுத்தக் கூடியதான ஒரு சூழலையும் நாம் உருவாக்கித் தருவோம்.
இந்நிலையில், நீங்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தலைமைகளைப் புறந்தள்ள வேண்டியது அவசியமானது என்று சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தவறான அரசியல் தலைமைகள் மீண்டும் எமது சமூகத்தைக் கையேந்தும் நிலைக்கே இட்டுச் செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.
எமது மக்களை அவர்களது சொந்தக் கால்களில் கௌரவமாக வாழவைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கடந்த காலங்களில் நாம் திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதேபோன்று, எதிர்காலத்திலும் தொடரவுள்ளோம்.
ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று நடைமுறைச்சாத்தியமற்றதும் உண்மையற்றதுமான அரசியலை நாம் ஒருபோதும் முன்னெடுத்ததில்லை. மாறாக, உண்மையானதும், நேர்மையானதும், நடைமுறைச்சாத்தியமானதுமான அரசியலையே இன்றும் என்றென்றும் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
அந்த வகையில், உண்மையான, நேர்மையான மனிதநேயத்தைத் தான் எமது அரசியல் மூலதனமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அவர்கள், நாம் என்றென்றும் மக்களுடன் நின்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதுடன், அதற்கான ஆணையையும் உரிமையுடன் வேட்டி நிற்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இதன்போது ஏனைய வேட்பாளர்களான யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, “சொல்லின் செல்வர்” இரா.செல்வவடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.