11 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 11 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று தலைமைச் செயலகம் வந்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

null
பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர் ஜெயலலிதா.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆ.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஜூலை நான்காம் தேதி தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகு அவர், கடந்த திங்கட்கிழமை தலைமைச் செயலகம் வருவார் என செய்திகள் பரவின. ஆனால், அவர் வரவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமையன்று மதியம் தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடிப் பணி நியமன ஆணை பெற்றவர்களில் ஐந்து பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.

உடல்நலம் குறித்த செய்திகள்

முதல்வரின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வலம் வந்த நிலையில் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார்.

இன்று தலைநகர் தில்லியில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் தனக்கு முக்கியமான அரசுப் பணிகள் இருப்பதால் தன்னால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதலமைச்சரின் உடல் நலம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

தமிழக சட்டப்பேரவையில், நிதி அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுவிட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிவருகின்றன.

கடந்த சில நாட்களாக, சில பத்திரிகைகளும் இணைய தளங்களும் முதல்வரின் உடல் நலம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதல்வரின் உடல்நலம் குறித்து செய்திவெளியிட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ரிடிஃப் இணைய தளம் மீதும் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் ராமசுப்பிரமணயன் மீது தமிழக அரசு நேற்று அவதூறு வழக்கைத் தொடர்ந்தது.