ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஏழு ஆசனங்களுக்காக நடக்க இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் ஏராளமான அரசியல் கட்சிகளும், சுயட்சை குழுக்களும், இவர்களோடு அகில இலங்கை மக்கள் காங்கிரசும் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இம்மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 43. 73 வீதத்தினர் முஸ்லிம்களும், 38.73 வீதத்தினர் சிங்களவர்களும், 17.40 வீதத்தினர் தமிழர்களும் வசிக்கின்றனர். 1963 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் 46.11 வீதத்தினரும், சிங்களவர்கள் 29.28 வீதத்தினர்களும், தமிழர்கள் 23.23 வீதத்தினரும் சனத்தொகை வீதாசாரம் இம்மாவட்டத்தில் காணப்பட்டது. எமக்கென்று ஒரு அரசியல் சக்தி இல்லாத அன்றைய நிலையில் கல்லோயா அபிவிருத்தி திட்டத்துக்கு பின்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாகவே சிங்களவர்களின் வீதாசாரம் இம்மாவட்டத்தில் அதிகரித்தமைக்கு காராணமாகும்.
கடந்த கால தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் நடக்க இருக்கின்ற தேர்தலில் கிடைக்க இருக்கின்ற ஆசனங்களை அனுபவத்தின் அடிப்படையில் எங்களால் ஊகித்துக்கொள்ள முடியும்.
இறுதியாக 2012 இல் நடைபெற்ற மாகான சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டு இம்மாவட்டத்தில் சுமார் 85,000 வாக்குகளை பெற்றிருந்தது.
அதேவேளை இறுதியாக இவ்வாண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை தொகுதியில் மட்டும், பி. தயாரத்ன இல்லாத நிலையில் ஐ. தே. கட்சி 47,658 வாக்குகளையும், ஐ.ம.சு.முன்னணி 76,409 வாக்குகளையும் பெற்றிருந்தது.
இம்முறை, இம்மாவட்டத்தின் தனிப்பெரும் கட்சிகளான முஸ்லிம் காங்கிரசும், ஐ. தே. கட்சியும் கூட்டு சேர்ந்திருப்பதானாலும், ஐ.ம.சு.முன்னணியில் இருந்து பிரிந்து பி. தயாரத்ன போன்ற சக்தியுள்ள அரசியல் வாதிகள் பலர் அக்கூட்டில் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுவதனால், நடக்க இருக்கின்ற பொதுத்தேர்தலில் 140,000 க்கும் மேற்பட்ட வாக்குகளை இம்மாவட்டத்தில் ஐ. தே. முன்னணி பெறலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.
அத்துடன் ஐ.ம.சு.முன்னணி அம்பாறை தொகுதிக்கு வெளியில் அக்கரைப்பற்றில் அதாவுல்லாவின் வாக்கு வங்கியை தவிர குறிப்பிட்டு கூறுமளவுக்கு வேறு எந்தவிதமான வாக்குகளும் பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. அப்படி பெற்றாலும் சுமார் 80,000 வாக்குகளுக்கு மேல் இம்மாவட்டத்தில் அவர்களால் பெறமுடியாது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு சேர்ந்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டு 136,423 வாக்குகளை பெற்று நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரசே பெற்றுக்கொண்டது.
எந்தவிதமான கூட்டனியுமின்றி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட 2001ஆம் ஆண்டின் தேர்தல் பெறுபேறுகளை பார்ப்போமானால் முஸ்லிம் காங்கிரஸ் 75,257 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 65,246 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களையும், ஐ.தே.கட்சி 58,468 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 48,789 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
இதற்கிடையில் இம்மாவட்டத்தில் மூன்றாவது சக்தியாக திகழ்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்தபட்சம் 40,000 க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று தனது ஒரு பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வர். இவர்களது அதிகபட்ச வாக்குகளாக கடந்த 2004 இல் 55,533 வாக்குகளை பெற்றிறுந்தும் ஒரு ஆசனத்தையே பெற்றிருந்தனர்.
நடைபெற இருக்கின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சி ஆகிய கூட்டணிக்கு போனஸ் ஆசனம் உட்பட நான்கு ஆசனங்களும், (சில நேரங்களில் ஐந்து ஆசனங்களும் கிடைக்கலாம்). இரண்டாவது கூடுதல் வாக்குகளை பெற இருக்கின்ற ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்களும் மூன்றாவது சக்தியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைக்கும்.
எனவே இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் ஒன்றை பெறுவதாக இருந்தால், ஆசனங்களை பெறுகின்ற கட்சிகளுக்குள் ஆகக்குறைந்த வாக்குகளை பெறுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெறுகின்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை இவர்கள் பெறவேண்டும். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாங்கள் இதுவரை காலமும் பெற்றுவந்த ஒரேயொரு ஆசனத்தை இம்மாவட்டத்தில் இழக்க வேண்டும்.
இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடுவது போன்று, 2001ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் சம்மாந்துறையில் நௌசாத், நிந்தவூரில் பைசால் காசிம், சாய்ந்தமருதில் மயோன் முஸ்தபாவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் உட்பட இம்மாவட்டத்தில் சக்தி படைத்த வேட்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் காங்கிரசை தோற்கடிப்பதற்காக முயல் சின்னத்தில் போட்டியிட்டனர். இறுதில் இம்மாவட்டத்தில் 14,808 வாக்குகளை மட்டும் பெறமுடிந்தது. அதாவது எந்தவித ஆசனமும் இன்றி தோல்வி அடைந்தனர்.
விடயம் என்னவென்றால், 2001 இல் கட்சிகளுக்கு இடையில் கூட்டணிகள் இருக்கவில்லை. அதனால் சாதகமான சூழ்நிலைகள் அதிகம் இருந்தும் முஸ்லிம் காங்கிரசை தோற்கடிக்க “முயல்” சின்னத்தில் போட்டியிட்டவர்களால் முடியவில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசும், ஐ. தே. கட்சியும் இணைந்து பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெறுகின்ற நாப்பதினாயிரதுக்கு மேற்பட்ட வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் தாண்டுவதற்கு முன்பு, அதனை நெருங்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும், அப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடித்தால் மட்டுமே அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் ஆசனம் ஒன்றை பெறமுடியும்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரசை அழிக்கும் நோக்குடன் பணங்களை வாரியிறைத்து முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் செயட்படலாமே தவிர வெற்றிபெற முடியாது. உண்மையை சொல்லும்போது சிலருக்கு வேப்பங்காய் போன்றிருக்கலாம் ஆனால் இதுதான் அரசியல் கள யதார்த்தமாகும்.
முகம்மத் இக்பால்