மக்கள் இன்று சுயமாக சிந்திக்கவேண்டிய தருணம் வந்து விட்டது : முன்னாள் v c

ismail (1)
அஸ்லம் எஸ்.மௌலானா
இன்று இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரம் தோன்றியுள்ளது, நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய் நாடாக இலங்கை எதிர்காலத்தில் பயணிக்க தயாராகி விட்டது. ஆனால் நமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன் பெறுபேறுகளை காண முடியாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை எமது சமூகம் உணர்ந்து மாறாத வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது.
இவ்வாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.முஹம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைச்சர் றிஸாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதுவபடுத்தி பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள அவர் நேற்று அம்பாறை கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது;
“இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பயனாக நல்லாட்சியின் சுபீட்சங்களை மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள். ஆனால் நமது மண் மாத்திரம்  பழைய எச்சங்களையே மீண்டும் கழுவி அலுமாரியில் அடுக்கி வைத்து அழகு பார்க்க முற்படுகிறதா என்கிற கேள்வி எழுகின்றது.
இந்த கேள்விக்கு விடையாக நாங்கள் இந்த பிராந்திய மக்களுக்கு ஒரு சந்தர்பத்தை வழங்க வேண்டும். அந்த வகையிலேயே எப்போதும் சமூக நலன் சார்ந்து மக்களுடன் மக்களாக இருந்து சிந்திக்கின்ற ஒரு தலைமையோடு ஒன்றிணைந்து இருக்கிறோம். இந்த இணைவு எமது பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் முழு கிழக்கிலும் அகலக் காலூன்றுகின்ற ஒரு நேர்மையான தலைமைக்கு மக்களாகிய நீங்கள் தேசிய  அங்கீகாரம் வழங்குகின்ற சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தந்திருக்கிறது.
சம்மாந்துறை தொகுதியானது காலாகாலமாக தனது பிரதிநித்துவத்தை தன்னகத்தே கொண்டிருந்த வரலாற்றை இன்று ஒரு சிலர் சுயநலத்துக்காக மாற்றியமைத்துள்ளனர்.  இந்த நிலை மாற வேண்டும். தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதி நமது மண்ணை பற்றி பேசுகின்ற ஒரு தலைமையை தெரிவு செய்கின்ற  சந்தர்ப்பம் இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்ற வேண்டுதலை மக்களுக்கு விடுக்கிறேன்.
மக்கள் இன்று சுயமாக  சிந்திக்கவேண்டிய  தருணம் வந்து விட்டது. என்னை  பொருத்தவரைக்கும் கடந்த காலத்தில் அரச அதிகாரியாக மாத்திரம் இருந்து கொண்டு இந்த பிராந்தியமே போற்றக்கூடியதான ஒரு நிறுவனத்தை சர்வதேசம் போற்றும் நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறேன். இது கடந்த  காலம் தென்கிழக்கு பல்கலைக்கழம் தொடர்பில் நான் கொண்டிருந்த இலக்கு நோக்கிய பயணத்தின் பெறுபேறாகும். 
அதேபோன்று இன்று புதியதோர் அரசியல் பயணத்தை தேர்ந்துள்ளேன். இதுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்த்த ஒரு இலக்கு நோக்கிய பயணமாகவே அமையும். அரசியலுக்கு புதிதாய் வந்துள்ள நான் எனது செயல்திட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினை வெளியிட உள்ளேன். அதில் எமது சம்மாந்துறை தொகுதி மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தின் முழு முஸ்லிம் சமூகத்தையும் இணைக்கும் செயலாக அது இருக்கும் 
பிரதேசவாதம் என்பது தற்போதுள்ள சில்லறை அரசியல்வாதிகளினால் தளைத்தோங்கி காணப்படுகிறது. இவற்றுக்கு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பேன்.
எமது அணியியில் படித்தவர்கள், புத்திஜீவிகள் மட்டுமல்லாது இளம் துடிப்புள்ள இளைஞர்கள், அரசியல் முதிர்ச்சி கொண்டவர்கள் களமிறங்கியுள்ளனர். நாட்டில் அரசியல் மாற்றம்  ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை எமது மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டுண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றில் இருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற் பணியாக இருக்கும். இந்த சமூகத்தை சர்வதேச தரத்துக்கு போட்டிபோடும் விதத்தில் தயார்படுத்துவதே எனது நோக்கமாகும். 
ஒரு நிறுவனம் என்ற ரீதியில் கடந்த காலத்தில் எந்த ஒரு அரசியல் அதிகாரமும் இன்றி தனித்து நின்று ஒரு அரச அதிகாரியாக மாத்திரம் இருந்து தென்கிழக்கு பலகளைக்கழகத்தை முன்னேற்றி காட்டி இருக்கிறேன். எனது அடுத்த முயற்சிக்கு ஒரு அரசியல் அதிகாரம் பக்கபலமாக இந்த சமூகத்துக்கு தோள் கொடுத்துதவும் என நம்புகிறேன். பலகலைக்கழகம் தொடர்பில் எவ்வாறு இலக்கு நோக்கி செயல்பட்டேனோ அவ்வாறு எனது சமூகம் சார்ந்து இலக்கு நோக்கியதாக எனது அரசியல் பயணம் அமையும் என உறுதியளிக்கிறேன்.
அத்துடன் முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து கொண்டு சிங்கள தேசிய தலைமைகளுடன் நெருக்கமான உறவை பேணி சுயநலங்களை கைவிட்டு விட்டு சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி வழிநடாத்திய மறைந்த தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் கண்ட கனவு இன்று ரிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் கான்கிரசிநூடாக நனவாக உள்ளது என்பது எமது சமூகத்துக்கு சொல்லும் பிரதான செய்தியாகும்.
முஸ்லிம்களின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் நாம் எமது முஸ்லிம் அடையாளத்துடன் இன்று தனித்துவமாக களமிறங்கி இருக்கிறோம். அன்று மக்கள் இந்த நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்றை விரும்பினார்கள். அந்த மாற்றம் எமது சமூகத்தை வந்தடையவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும். அந்த மாற்றத்துக்கு சம்மாந்துறை மண்ணில் இருந்து தலைமை கொடுப்பதே எனது முதற் பணியாகும்.
மட்டுமல்லாது எனது இந்த பயணத்தில் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் கிராமங்களையும் அரவணைத்து தமிழ் கிராமங்களையும் சிங்கள சகோதரர்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளேன்.
இன மத பிரதேச வேடுபாடுகள் இல்லாமல் அரசியல் பயணத்தை தொடருவதே எனது நோக்கமாகும். அவ்வாறு இன்று என் கண் முன்னே இந்த மக்களாதரவு மாற்றம் ஒன்றை நோக்கி பெருகி நிற்பது குறித்து சந்தோசப்படுகிறேன்.
இறைவனின் அருளால் இந்த மக்களின் ஆணை கிடைக்கும் என்று வெகுவாக நம்புகிறேன். அவ்வாறு கிடைக்கும்போது எனது சமூகத்துக்கான, நேர்த்தியான திட்டமிட்ட அடிப்படையிலான பணி தொடரும் என நம்புகிறேன்.
முந்திய ஆட்சியில் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் எதனை சாதித்துள்ளார்கள் என்கிற கேள்வியை ஒரு முறை மக்கள் தங்களுக்குள்ளே கேட்டுப்பார்க்கட்டும். சம்மாந்துறை மண்ணுக்கு கடந்த காலங்களில் பல அதிகாரங்களை கொண்டிருந்தவர்களே இன்று மீண்டும் மக்கள் ஆணை கேட்கின்றனர். இவர்கள் இந்த மக்களுக்கு செய்து காட்டிய விடயம் ஒன்றையேனும் தொட்டுக்காட்ட முடியுமா?
சேவையின் செம்மல்களாக திகழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் மஜீத், தொப்பி முஹைதீன், அன்வர் இஸ்மாயில் ஆகியோர்களுக்கு பிறகு முஸ்லிம் கட்சியூடாக பெற்ற அரசியல் அதிகாரம் சாதித்தது என்ன என்ற கேள்விய மக்கள் எழுப்பி விடை காண வேண்டும். அன்வர் இஸ்மாயில் என்றதொரு இளம் சிங்கம் எம்மை விட்டு பிரிந்தது சம்மாந்துறை மண் இழந்த மிகப்பெரிய இழப்பாகும். இதனை ஈடு செய்யுங்கள் என்றுதான் கோருகிறேன்.
மக்களுக்காகவே அரசியல் தலைமை, அரசியல் தலைமைக்காக மக்கள் அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தை பிழையாக வழிநடாத்த நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
எனது இந்த தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னரான மக்களுக்கு சொல்லும் ஒரு சிறியதொரு சிந்தனைக் குறிப்பே இது. எதிர்வரும் நாட்களில் இன்னும் விரிவாக மக்களுடன் கலந்துரையாடவுள்ளதுடன் மேலும் பல முக்கிய செய்திகளையும் மக்களுக்கு சொல்ல உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.