ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரசியல்வாதிகள் எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக, அவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டுமென்ற தேவை கிடையாது என தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றதோடு, அவரை எப்போதும் எதிரியாகப் பார்த்தது கிடையாது எனக் குறிப்பிட்டார்.
அதேபோன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் நல்ல உறவைப் பேணி வந்ததாகத் தெரிவித்த அவர், பிரிந்து வேறு பாதைகளில் செல்வது அரசியலில் ஓர் அங்கம் எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சிறிசேனவும் தானும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக பல தசாப்தங்களாக இருப்பதாகவும் தாங்களிருவரும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் ஒற்றுமையாக இருப்பதை விரும்புவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
“நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது, உங்களுக்கு கீழ் அமைச்சராகப் பணிபுரிந்தவருக்குக் கீழ் பிரதமராகப் பணிபுரிவது கடினமாக இருக்காதா?” எனக் கேட்கப்பட்டபோது, முன்னர் காணப்பட்ட பிரதமர் பதவிக்கும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்குப் பின்னரான பிரதமர் பதவிக்குமிடையில் வித்தியாசம் காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் பதவியில் பணியாற்றுவதில் எந்தப் பிரச்சினையிருப்பதையும் தன்னால் காணமுடியவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனும் சீனாவுடனும் இலங்கை சிறந்த உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்ட மஹிந்த, இலங்கையானது இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல்களை விடுக்காது எனவும், இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக இன்னொரு நாடு வருவதற்கு உதவுவதனூடாக இலங்கைக்கு எந்த ஆதாயமும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.