முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தன் தலை காக்குமா ?

 11262211_1692199914346683_3156447161061382949_n

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

இம்முறை மு.கா எதிர் கொள்ளப் போகும் பாராளுமன்றத் தேர்தலானது எதிர் காலத்தில் மு.கா தனது இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லையா? என எதிர்வு கூறக் கூடிய மிக முக்கிய தேர்தலாக இலங்கை அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.மு.காவின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா இம்முறை அதிக செல்வாக்குச் செலுத்தும் என நம்பப்படுவதால் மு.கா ஏனோ தானோ என தனது வியூகங்களினை வகுக்காது கச்சிதமாக தனது செயற்பாடுகளினை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் ஒரு சிறிய சறுக்கல் கூட மு.காவினை அகல பாதாளத்தினுள் கொண்டு சேர்க்கலாம்.இதன் பிற்பாடு நடைபெற உள்ள தேர்தலானது தொகுதி வாரி முறையில் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதால் குறித்த தொகுதியில் தனது பாராளுமன்ற உறுப்பினர்களினை வைத்திருப்பது அடுத்த தேர்தலில் மு.காவின் இருப்பினைத் தக்க வைத்துக் கொள்ள இலகுவானதாகவும் அமையும்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்குமாக இருந்தால் அது ஐ.தே.கவுடன் தான் என்பது உறுதியானது.அல்லாது போனால் நிச்சயமாக மு.கா தனித்து தனது மரச் சின்னத்திலேயே களமிறங்கும் என்பதனையும் உறுதிபடக் குறிப்பிடலாம்.அம்பாறை மாவட்டத்தில் மு.கா மூன்று ஆசனங்களினை தங்கள் கட்சிக்காக தருமாறு ஐ.தே.கவிடம் கேட்டுள்ள போதும் இரு ஆசனங்களினை மாத்திரம் ஐ.தே.கவானது மு.காவிற்கு வழங்கும் முடிவு எடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.இரு ஆசனங்களினை வைத்து தங்களால் வியூகம் வகுக்க முடியாத காரணத்தினால் ஒரு போதும் மு.கா இரு ஆசனங்களினை ஏற்று ஐ.தே.கவுடன் கூட்டுச் சேரப் போவதில்லை.முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் வழங்கப்படுமாக இருந்தால் தேசியப் பட்டியல் வழங்கப்பட மாட்டாது என ஐ.தே.க உயர்பீடம் குறிப்பிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மு.காவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஆசனங்களினை வழங்கும் போது கல்முனைத் தொகுதியிற்கு ஹரீசும்,சம்மாந்துறைத் தொகுதியிற்கு கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூரும்,பொத்துவில் தொகுதியிற்கு பைசால் காசிமினையும் நியமிக்கவே அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.தற்போது மு.காவின் செயலார் நாயகம் தானும் இத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என மு.காவிற்கு அழுத்தம் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அங்கம் வகித்தவரும்,தனக்கென ஒரு குறித்த வாக்கு வங்கியை உடையவருமான பைசால் காசிமினைப் புறக்கணித்து கட்சியின் செயலாளர் நாயகமினை நியமிக்க முடியாது என்பதே யதார்த்தம்.அவ்வாறு நியமித்தால் அது பைசால் காசிமினை பகிரங்க அவமானமானப்படுத்துவதாக  அமையும்.இதற்குப் பிறகு அவர் கட்சியில் நிலைப்பாரா என்பது சந்தேகமே.இவர் இதன் பிற்பாடு கட்சி மாறும் எண்ணம் கொண்டால் அது அமைச்சர் றிஸாத்தின் பக்கம் பாய்வதனைத் தவிர வேறு வழி இருக்காது.இச் சந்தர்ப்பத்தில் இம் மாற்றம் முஸ்லிம்களிடத்தில் அமைச்சர் றிஸாத்தின் வெற்றிக்கு பாரிய சாதகமாக அமையும்.  

அம்பாறை மாவட்டத்தில் மு.கா விற்கு அதிக சவால் விட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவிற்கு ஆதரவளித்ததன் காரணமாக முஸ்லிம்களின் அதிருப்தியினை மிகையாகவே சம்பாதித்து வைத்துள்ளார்.இதன் காரணமாக இவரிற்கு தனது ஊர் வாக்குகளினைத் தவிர ஏனைய ஊர்களில் இருந்து அதிகம் பெற மாட்டார்.அமைச்சர் அதாவுல்லாஹ்வின் ஊரான அக்கரைப்பற்றிலும் பலர் இவரினை விட்டும் பிரிந்து சென்றுள்ளனர்.எனவே,முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வினை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு இதனை விட சிறந்த சந்தர்ப்பம் ஒரு போதும் எக் கட்சிக்கும் அமையப் போவதில்லை.அக்கரைப்பற்று மக்களில் சிறு தொகையினரினை அதாவுல்லாஹ்விடம் இருந்து திசை திருப்பினால் அதாவுல்லாஹ் வெற்றி பெறுவதற்கான சாதகத் தன்மை மிகவும் நலிவாக்காப்படும்.இன்று பிரதேச வாதம் தலைவிரித்து ஆடுவதால் அக்கரைப்பற்றில் ஒரு தகுதியான வேட்பாளரினை யாரும் நியமிக்காத போது தங்கள் ஊரிற்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநித்துவம் வேண்டும் என எவ்வித தயக்கமும் இன்றி அமைச்சர் அதாவுல்லாஹ்விற்கு அக்கரைப்பற்று மக்கள் வாக்களிப்பார்கள்.எனவே,மு.கா தனித்து களமிறங்கி அக்கரைப்பற்றிலும் ஒரு வேட்பாளரினை கலமிறக்கினால் இச் சவாலினையும் திறம்பட எதிர் கொள்ளலாம்.

சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை  சாய்ந்தமருது மக்களிடையே ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய தாக்கங்களில் ஒன்று யாவற்றிலும் சாய்ந்தமருது தனது தனித்துவத்தினை பாதுகாக்க  வேண்டும் என்பதாகும்.கடந்த முறை கூட சாய்ந்தமருதின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்க தே.காவில் ஒரு குறித்த நபரினை களமிறக்குமாறு ஒரு குறித்த சாய்ந்தமருது குழுவினர் கேட்டிருந்தனர்.இந் நபர் தனக்கு ஆபத்தாக மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவரினை நியமிக்காமல் புறக்கணித்தமை இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.சாய்ந்தமருது மக்கள் தங்கள் தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ள  தங்கள் ஊரிற்கு என ஒரு பிரதிநித்துவம் வேண்டும் என்ற கொள்கை அதிகம் வலுக்க ஆரம்பித்துள்ளது.சுயேட்சை முறைமை கூட பலரினால் சிந்திக்கப்படுவதாக அறியப்படுகிறது.எனவே,சாய்ந்தமருது மக்களின் உள்ளங்களினை மு.கா திருப்ப வேண்டுமாக இருந்தால் குறைந்தது தங்களது கட்சி சார்பாக ஒரு வேட்பாளரினை களமிறக்க வேண்டும்.இதற்கு கல்முனை ஹரீசின் ஆசனத்தினைப் பறித்து சாய்ந்தமருதினைச் சேர்ந்த ஒருவரிற்கு வழங்க முடியாது.மேலும்,மு.கா சாய்ந்தமருதில் ஒரு வேட்பாளரினை களமிறக்கத் தவறும் பட்சத்தில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் பக்கம் சாய்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.எனவே,இப் பிரச்சினையினை எதிர் கொள்ளக் கூட மு.கா தனித்து களமிறங்குவதே தீர்வாகும்.

அ.இ.ம.காவானது தங்களது சின்னத்தில் தனித்து அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் கேட்க உள்ளதாக அறிய முடிகிறது.இதன் போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதியிலும் தனது கட்சி  வேட்பாளரினை களமிறக்கும்.முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கிய மூன்று நபர்களினதும்  ஊர் மக்களினைத் தவிர ஏனைய ஊர் மக்கள் தங்களது ஊரின்  பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்க என்ற கோசத்தோடு தனது ஊரில் களமிறங்கும் வேட்பாளரிற்கே வாக்களிப்பார்கள்.இது அ.இ,ம.காவின் வெற்றிக்கு சாதகமானதாகும்.இதனை மு.கா திறம்பட எதிர் கொள்ள வேண்டுமாக இருந்தால் இவர்களிற்கு நிகராக தனது வேட்பாளரினையும் களமிறக்குவது சிறப்பாக அமையும்.

மூவரினை ஒரு தேசிய கட்சியில் களமிறக்கும் போது மூவர் மாத்திரமே மு.காவின் வெற்றியில் அதிக கரிசனை கொள்வார்கள்.பலரினை களமிறக்கும் போது வெற்றி பெறச் சாத்தியமல்ல எனத் தெரிந்தாலும் “ நானும் வென்று விடுவேனோ? ” என்ற எண்ணத்தோடு முழு வீரியத்தோடு செயற்படுவார்கள்.பொது பல சேனா போன்ற கட்சிகள் தனித்து கேட்க முடிவு செய்துள்ளதால் முஸ்லிம் கட்சிகள் தேசிய கட்சிகளுக்குள் முக்காடு போடாது  தனித்து தேர்தலில் கேட்டு முஸ்லிம்களின் பலத்தினையும் நிரூபிக்க வேண்டும்.எனவே,தற்போதைய நிலைமையினை நன்கு ஆராயும் போது தனித்து கேட்பதே மு.க எடுக்கும் சிறந்த முடிவாக அமையும்.