எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா (பிபிஎஸ்) அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது எண்ணம் அதற்காகவே நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுன (பிஜேபி) என்ற கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாக, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ‘தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல சிறிய கட்சிகள் காணப்படுகின்ற போதிலும், சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதுவும் இல்லை.
பிக்குகள் நாடாளுமன்றம் செல்வதற்குப் பலர் எதிராக உள்ளார்கள், ஆனால் இலங்கையின் அரசியல் கலாசாரம் மிகவும் மோசமாக உள்ளதால் நாங்கள் அவ்வாறு செய்கிறோம்’ என ஞானசார தேரர் தெரிவித்தார். ‘இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கல்வியறிவற்றவர்கள். அரசியல்வாதிகள் இரட்டை முகமுடையவர்கள்.
தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குகின்றன. இதை நாங்கள் மாற்ற வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார். எந்தவொரு பிரதான கட்சியையும் ஆதரிக்காத காரணத்தால், தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.