முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான பணிமனைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்திருக்கிறார்.
சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையில் 23 கி.மீ. தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனித தோமையர் மலை வரையிலும் சுமார் 22 கி.மீ. தூரத்திற்கு இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இன்று துவக்கப்பட்டிருக்கும் சேவையில் குறைந்தபட்சக் கட்டணமாக பத்து ரூபாயும் அதிகபட்சக் கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
மெட்ரோ ரயில் சேவை துவக்கிவைக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் துவக்கிவைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்திருக்கும் அறிக்கையில், இந்தத் திட்டத்திற்கு ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்டதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல, மெட்ரோ ரயிலின் கட்டணங்கள் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் மெட்ரோ ரயில் கட்டணங்களைக் குறைக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.