கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: மைத்திரியிடம் மகிந்த !

Mahinda-Maithri-1 
 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சந்திக்கவில்லை என இருத்தரப்பிலும் ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும், இருத்தரப்பும் சந்திப்பு நடந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த தான் ஒதுங்கி கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார். 

எனினும் இதுவரை தனக்குப் பின்னால் வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தனக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் தேவையில்லை என பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை சந்தித்த போது கூறியதாகவும் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பில் அல்லது கம்பஹாவில் போட்டியிட வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுள்ளார். 

இதனை தவிர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கருத்தை அறிந்து தன்னை தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கூறியுள்ளார். 

இந்த விடயங்கள் தொடர்பில் நேற்று காலை இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது.