இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் சமுத்திரத்தில் மாலுமி அற்ற கப்பலில் பயணிப்பவர்களாக தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் !

1463729_1387869691460906_2034202824_n_Fotor_Collage_Fotor

எழுத்து – மீரா அலி ரஜாய்

ஏழாவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டமை நாம் யாவரும் அறிந்ததே . இன்று காலையிலிருந்து பிரதான கட்சிகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாகவும் , உற்சாகத்துடனும் ஆரம்பித்துள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில் இறங்குவது தான் சாலச் சிறந்தது . ஏனெனில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; ஐக்கிய தேசிய கட்சியுடன் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடனோ போட்டி இட்டால் நமது முஸ்லிம் வாக்குகளின் மூலம் பெரும்பான்மை கட்சிகள் தங்களுடைய சிங்கள வாக்குகளுடன் நமது வாக்குகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய ஆசனங்களை அதிகரித்துக் கொள்வார்கள் .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடு பூராகவும் தனித்து களமிறங்கி தன்னுடைய மக்கள் பலத்தை முழு நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . ஏனெனில் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் வபாத்தை தொடர்ந்து வந்த தேர்தல்களிலெல்லாம் மு.கா சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் தான் தேர்தல்களில் களமிறங்கி இருந்தது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் அவர்கள் தனித்துவமாக களமிறங்கி தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் தங்கள் கால்களில் சுயமாக யாருக்கும் எந்த பெரும்பான்மை கட்சிகளுக்கும் கூஜா தூக்காமல் தங்கள் சமூகத்துக்காக எதிர்க் கட்சி அரசியலை செய்து வருகின்றமை நாம் அனைவரும் தெரிந்ததே .

அதே போன்று தான் மக்கள் விடுதலை முன்னணி , சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி , மற்றும் சில இடது சாரிக் கட்சிகளும் தங்கள் சின்னங்களில் தனித்து தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சமூகத்தின் நாடாளுமன்ற இருப்புக்களை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைத்து மரச்சின்னத்திலோ அல்லது பொதுவான சின்னத்திலோ தங்களுக்குள் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகளையும் , கொள்கைகளையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு; ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமைகளுக்கும் , பாதுகாப்புகளுக்கும் கவசமாக தங்கள் பாராளுமன்ற கதிரைகளை வெற்றி கொள்ளும் நோக்கில் பொதுவானதொரு புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த பொதுத் தேர்தலை முகம் கொள்ள தயாராக வேண்டும் .

மனிதன் , தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் தான் படைக்கப்பட்டுள்ளான் என்கின்ற அல்லாஹ்வின் வசனங்களில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் என்பதால் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து முஸ்லிம் உம்மாவுக்காக ஒற்றுமைபடவேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் தலைவர்கள் உள்ளனர் .

இன்று முஸ்லிம் சமூகம் அரசியல் சமுத்திரத்தில் மாலுமி அற்ற கப்பலில் பயணிப்பவர்களாக தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் .

முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய காங்கிரஸ் , நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு , தேசிய மனித உரிமைகள் கட்சி இன்னும் இதர அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் .

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் , அதாஉல்லா போன்றோர் தாங்கள் பிரிந்து அல்லது பெரும்பான்மை கட்சிகளில் இணைந்து போட்டியிட்டால் தான் அடுத்த புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக வலம் வரலாம் என்கின்ற அதிகார விடயங்களை சற்று தள்ளி வைத்து விட்டு சமூகத்துக்காக சிந்திப்பீர்கள் என எண்ணுகின்றேன்.