தேர்தல்முறை மாற்றம் குறித்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளையும் உள்ளடக்க வேண்டும். இதன் மூலமே சகல மக்களும் பாதிக்காத வகையில் தேர்தல் முறைமையினை மாற்றியமைக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளினால் நேற்று கொழும்பு பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூட்டாக வலியுறுத்தப் பட்டது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் லங்கா சமசமாஜக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசு தேவ நாணக்கார, இலங்கை தொழிலாலர் கங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம்,சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் ராஜா கொல்லுரே மற்றும் ஈ.பி.டி.பி செயலாளரும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் எம்.பி.யுமான பிரபா கணேசன், சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார,
புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில் குறித்த திருத்தத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகளவு காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த திருத்தமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் முன்னர் சிறியகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளை அரசானது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.
ஜக்கிய தேசியக்கட்சியின் செயற்பாடுகளானது சர்வதேச நாடுகளின் தேவைக்கு ஏற்றவாறே எல்லா சந்தர்ப்பங்களிலும் அமைந்திருக்கின்றது. அமெரிக்காவானது எப்பொழுதுமே தமக்கு ஏற்றவகையில் ஆட்சியை கொண்டு நடத்தும் அரசை பிறநாடுகளிலிருந்து எதிர்ப்பார்க்கும். அந்தவகையிலான சுழற்சி செயற்பாடுகளையே ஏனைய நாடுகளுடன் முன்னெடுக்கும் அந்த வகையிலேயே இன்று எமது நாட்டிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை அமெரிக்கா இயக்குகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்த அரசு துணைபோவதனால் இன்று எமது நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு வகையில் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாட்டில் இனவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்கவுமே சிறியகட்சிகள் உட்பட சிறுபான்மை கட்சிகள் இன்று ஒன்றிணைந்து செயற்பட முன்வந்துள்ளன.
எதிர்வரும் பொது தேர்தலில் சக்திமிக்கவரான முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சக்திமிக்கதான அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றார்.
லங்கா சமசமாஜக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
புதிய தேர்தல் முறை உள்ளடங்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில் இவை ஐக்கிய தேசியக்கட்சியின் தேவைக்கு ஏற்றவாறும் ஒரு சிலரின் சுயநலனுக்காகவுமே சிறியக்கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பாதிப்பு தொடர்பில் அக்கறை செலுத்தாமல் அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்டத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் மிகவும் அவசியமானது அந்தவகையில் முதலாவது எமது யோசனையானது ஒவ்வரு வாக்காளர்களுக்கும் இரட்டை வாக்கு சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரு வாக்காளர் ஒரு வாக்கு சீட்டினை பயன்படுத்தி அந்த தொகுதியில் போட்டியிடும் தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு தமது வாக்கினை செலுத்த முடியும். இராண்டாவது வாக்கு சீட்டைப்பயன்படுத்தி வாக்காளர் ஒருவர் தனக்கு விருப்பமான கட்சிக்கு தனது வாக்கினை அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இந்த முறையே இன்று வளர்ந்து வரும் நாடுகளான ஜேர்மனி, நியூஸிலாந்து போன்றவற்றில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் தோ்தல்களின் போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த முறையை பின்பற்றும் போது பாராளுமன்றத்திற்கு அனைத்து பிரதேசங்களிலும் பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் தேசிய ரீதியாகவும் தொகுதிவாரி அடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்தெடுக்கப்படுவர்.
இன்று எமது நாட்டில் மாவட்ட ரீதியாக சனதொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதோடு மக்களின் இடப்பெயர்வுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அனைத்து மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை உள்வாங்குவது மிகவும் அவசியம்.
ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியில் அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறான சட்ட மூலங்களும் திருத்தச்சட்டங்களும் நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்திலேயே நாட்டில் இனவாதிகளிடையே இனவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குகின்றது. எனவே அவ்வாறான நிலைமைகளுக்கு மீண்டும் எப்போதும் நாம் இடமளிக்க கூடாது.
20ஆவது திருத்தச்சட்டம் என்பது எமது நாட்டிற்கு மிகவும் தேவையானதொரு சட்ட திருத்தம் இதனை மாற்றியமைக்க மூன்றில் இரண்டு பெருபான்மை வேண்டும். அந்தவகையில் இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி கொண்டு அனைத்து மக்களின் பிரதிநிதிதுவங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திடாதவாறு தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இது தொடர்பில் தொடர்ச்சியாக ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இதன் போது கருத்து தொிவிக்கையில்,
புதிய தேர்தல் முறையின் பிரகாரம் விருப்பு வாக்குமுறை அகற்றப்பட்டு தொகுதிவாக்கு முறை உள்வாங்கப்படுவதனை நாம் வரவேற்கின்ற அதேவேளை சிறியக்கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளை இந்த திருத்தமானது எவ்வாறான சந்தர்ப்பத்திலும் பாதிக்க கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
வடக்குஇ கிழக்கில் யுத்தக்காலப்பதியில் பாதிக்கப்பட்ட தொகுதிகளின் மீளாய்வானது யுத்தப்பாதிப்புகளுக்கு ஈடுசெய்ய கூடிய அளவு அமைய வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வழமைப்பபோல எதிர்வரும் தேர்தலை இலக்குவைத்து செயற்படுகின்றது. இந்த அரசானது தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. கடந்தக்கால ஆட்சியில் மக்களுக்கு நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தோம் முன்னைய அரசில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும்பட்சத்தில் அதனையும் நாம் எதிர்காலத்தில் திருத்துகொள்ள தயாராகவே உள்ளோம். தொடர்ந்தும் இனங்களுக்கிடையே நல்லிணகத்தை ஏற்படுத்த செயற்பட தயாராகவே உள்ளோம் என்றார்.
இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
புதிய தேர்தல் முறைமாற்றமானது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பெரும்பாலும் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளை விட பெருந்தோட்ட மக்களின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிதுவங்களையே அதிகளவு பாதிக்கின்றது.
புதிய தேர்தல் முறைமாற்றம் காரணமாக பெருந்தோட்ட மக்களுக்களின் பாராளுமன்ற பிரதிநிதுவங்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும் தோ்தல்கள் ஆணையாளர்களுக்கும் எமது யோசனையை முன்வைத்துள்ளோம். ஆனால் இதுவரை இது தொடர்பில் எந்த கவனமும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரும்பட்சத்தில் அதற்கு எவ்வாறான சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க போவது இல்லை என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் 20 பேர் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் முறை மாற்றம் காரணமாக இதில் முஸ்லிம் மக்கள் பொிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த திருத்தத்திற்கு பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பினையே தெரிவிக்கின்றனர். ஜக்கிய தேசியக்கட்சி சுயநலனின் அடிபடையிலேயே செயற்படுகிறது.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மை பலம் உடைய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் வரை ஆட்சியை கொண்டு நடத்த இடமளிக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
20 ஆவது திருத்தம் எந்த வடிவில் தயாரிக்கப் பட்டுள்ளது என்பது தொடர்பில் கூட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு தெரியாது அந்த வகையிலேயே ஜக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது.
இந்த ஆட்சியின் செயற்பாடுகள் மக்களுக்கு ஏற்தொன்றாக கருத முடியாது எனவே ஜக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் பொது தேர்தலில் சிறியகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சக்திமிக்கதான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி ஒன்றை உருவாக்க செயற்பட வேண்டும் என்றார்.