அஸ்லம் எஸ்.மௌலானா
மர்ஹூம் எம்.ஐ.எம்.சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவாகியுள்ளது. இச்சுற்றில் ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடத்திய இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 முன்னணி விளையாடுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. போட்டிகள் யாவும் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இறுதிப் போட்டிக்கு ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாட்டுக் கழகம், மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் என்பன தெரிவாகியிருந்தன.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் 1-0 எனும் கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவானது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியை கண்டுகளிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். கல்முனை மாநகர முதல்வரின் ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரங்கு ரசிகர்களால் நிரம்பி வழிந்திருந்தது.
கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.ஏ.மனாபின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் தலைவர் அனுர டி.சில்வா கௌரவ அதிதியாகவும் மர்ஹூம் எம்.ஐ.எம்.சமீம் அவர்களின் சகோதரர் எம்.ஐ.ஏ.ரவூப் ஹாஜி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கை உதைபந்தாட்ட சம்மேனத்தின் உப தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், டாக்டர் தாஜுதீன் காரியப்பர், கல்முனை முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உள்ளிட்ட பல பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
பரிசளிப்பு நிகழ்வின்போது இச்சுற்றுப் போட்டியில் சம்பியனாக தெரிவான மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்துடன் 30,000 ரூபா பணப்பரிசும் இரண்டாமிடம் பெற்ற ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாடுக் கழகத்திற்கு ஆறுதல் கிண்ணத்துடன் 15,000 ரூபா பணப்பரிசும் மூன்றாமிடம் பெற்ற கல்முனை பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகத்திற்கு 5000 ரூபா பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டதுடன் திறமை காட்டிய வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன..