ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் ஜூன் 17 முதல் 20ஆம் திகதி வரை ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் அரசியல், பொருளாதார, கலாசார அம்சங்களில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உட்பட, இருதரப்பு விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை அமைச்சர் ஃபியூமியோவுடன் மேற்கொள்ளவுள்ளார். அத்தோடு, இலங்கையின் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், இலங்கையின் அனுபவங்களைக் கொண்டு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர, ஜூன் 20ஆம் திகதி, டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஆசியாவில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய நல்லிணக்கம், ஜனநாயகப்படுத்தல் தொடர்பான உயர்நிலை செயலரங்கில் உரையாற்றவுள்ளார்.