‘பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்’-பழனி திகாம்பரம்

article_1433913287-Thigambaram300‘225 நாடாளுமன்ற  உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் முறைமையை அரசு நிறைவேற்றுமானால் அது சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக  பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்’ என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

‘இச்சட்டமூலமானது 255 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கமேயானால் அதனை முழுமையாக ஆதரிப்போம். இதற்கு மாறாக நாடாளுமன்றங்களின் பிரதிநிதித்துவமும் தேர்தல் தொகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளமையானது சிறுபான்மை மக்களின் நீண்டகால கனவாக இருக்கும் அபிவிருத்தி, உரிமை, அபிலாஷைகளை கேள்விக்குட்படுத்துகின்றது.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா,மஸ்கெலியா தேர்தல் தெராகுதிகளை மாத்திரமே பிரிக்க முடியும். இந்நிலையில் தேர்தல் தொகுதி குறைக்கபட்டுள்ளமையால் இத்தேர்தல் தொகுதிகளை பிரிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளின் அங்கத்துவம் கிடைக்குமா என்பது கேள்விக்குரியே.

எனவே  அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தை ஜனாதிபதி நிறைவேற்றுவாராயின் அது சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும்’ என திகாம்பரம் மேலும் கூறினார்.