‘தற்போதைய கூட்டணி பலம் பொருந்தியதாக அமைய எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை காலம் பதில் சொல்லும்’

images

தற்போதைய கூட்டணி அரசியல் ரீதயாகவும் வரலாற்று ரீயாகவும் சாதனைகள் படைக்க வேண்டுமானாலும் ஒரு சமூகத்தை குறிப்பாக அங்கிகரிக்கப்பட்ட பலம் பொருந்திய சக்தியை விடுத்து செயற்பட துணிவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை காலம் பதில் சொல்லும்’ என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

‘மலையக மக்களுக்கு இந்த நாட்டில் அரசியல் ரீதியாக விமோசனத்தை ஈட்டுகொடுப்பதற்கு அன்று முதல் இன்றுவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடி வந்துள்ளது. அதன் பயணம் காலத்துக்கு ஏற்றவாறு உத்வேகமும் எழுச்சியும் அடைந்து வந்துள்ளது. இது யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விடயமாகும்’ என்றார்.

மலையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்றுவரை மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாரிய இயக்கமாகும். அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மலையக சமூகம் தொடர்பில் இ.தொ.கா.வுடனே ஆலோசனைகளை நடத்தி அதன்கோரிக்கைகளை நிறைவேற்றி வந்துள்ளன.

இந்த நாட்டில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டபோதும் தமிழ்மொழி ஒடுக்கி அடக்கப்பட்ட போதும் வடக்கு, கிழக்கு அரசியல் பேரியக்கங்கள் இ.தொ.கா.வையும் அரவணைத்துகொண்டன. இதிலிருந்து இ.தொ.கா.வின. மாபெரும் சக்தியை மலையக அரசியல் சங்கங்கள் உணராவிட்டாலும் வடக்கு, கிழக்கு சங்கங்கள் உணர்ந்துள்ளன.

எதிரும் புதிருமாக செயற்பட்ட ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்காக ஒருங்கிணைந்தார்கள். அந்த கூட்டமைப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ§க்கு முக்கிய இடமளிக்கப்பட்டு தலைவர்களில் ஒருவராக அமரர் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார். இதிலிருந்து ஒரு சமூதாயத்தை ஈடேற்றுவதற்கு மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் உறுப்படியான ஒட்டு மொத்தமான அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதை எவராலும் தட்டிக்கழித்துவிட முடியாது.

மலையக மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் அனைத்து உரிமைகளையும் இன்னும் பிற சலுகைகளையும் பெற்றுகொள்வதற்கான தீரக்கதரிசனமுடைய விவேகமான பணியை இ.தொ.கா. தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை.