இங்கிலாந்து மற்றும் சோமர்செட் அணிகளின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான கிரேக் கீஸ்வெட்டர் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் நொதம்ப்டன்ஷையர் அணிக்கு எதிராக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது கீஸ்வெட்டரின் மூக்கில் தாக்கிய பந்து, கண்ணுக்கு கீழே உள்ள எலும்பையும் சேதப்படுத்தியது.
இந்நிலையில் , அவருடைய இடது கண்ணில் பார்வைக் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக கீஸ்வெட்டரின் அதிரடி கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக கீஸ்வெட்டர் கூறுகையில், “இதற்கு முன்னர் விளையாடியதைப் போன்று அதிரடி துடுப்பாட்டக்காரராக இனிமேல் விளையாட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சுவாரஷ்யமிக்க ஒரு வாழ்க்கையாக அமைந்தது.
அதில் ஏராளமான ஏற்றங்களையும், அவ்வப்போது இறக்கங்களையும் சந்தித்திருக்கிறேன். நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். எந்த வருத்தமும் இன்றி விடை பெறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கீஸ்வெட்டர் இங்கிலாந்து அணிக்காக 46 ஒருநாள் போட்டிகளிலும், 25 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதுதவிர சோமர் செட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.