துருக்கி பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்தது !

ee882a1e-4c2c-4b96-ac98-66cb27a0c0de_S_secvpf

துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஏ.கே. கட்சிக்கும், குர்தீஸ் மக்கள் ஆதரவு பெற்ற எச்.டி.பி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவுகள் வெளிவர தொடங்கின.

இந்த தேர்தலில் ஆளும் ஏ.கே. கட்சி மீண்டும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்கட்சி பின்னடைவை சந்தித்தது.

தற்போது 99 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் அக்கட்சி 41 சதவீத வாக்குகளை பெற்று 258 இடங்களை கைப்பற்றியுள்ளது. தனி மெஜாரிட்டி பெற இன்னும் 18 இடங்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் அக்கட்சி மெஜாரிட்டியை இழந்துள்ளது. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் குர்தீஸ் மக்களின் ஆதரவு பெற்ற எச்.டி.எப். கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக 10 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அக்கட்சி 75 முதல் 80 இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2003–ம் ஆண்டில் எர்டோகன் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அப்போது மூன்றில் 2 மடங்கு மெஜாரிட்டி பெற்றார். அதன் பின்னர் துருக்கியில் அதிபர் ஆட்சி முறையை புகுத்தினார். அதிக அதிகாரத்துடன் கூடிய அதிபராக அவர் பதவி ஏற்றார். தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு அவரது கட்சி தனி மெஜாரிட்டியை இழந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எர்டோகன் தனது அதிகாரத்தை நீட்டிக்கவும், அரசியல் சட்டத்தையும் தன்னிச்சையாக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஏ.கே. கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் எச்.டி.பி. கட்சி இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கியில் அதிபர் ஆட்சி முறை தேவையா என பரிசீலனை செய்யும் நிலை வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.