கருஞ்சீரகம் ஓர் அற்புத நோய் நிவாரணி..!

கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து.