குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்திருக்கும் நிலை உள்ளது. செல்போனில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மட்டும் காரணமில்லை. உடலில் சூரிய கதிர்வீச்சுகள் படாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் வைட்டமின் D குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் வைட்டமின் D குறைவது கிட்டப்பார்வைக்கு மூலகாரணமாக அமையும் என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பான ஆய்வுக்கு 51 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 31 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் 8 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள். ஆய்வின் முடிவில் 38 பேருக்கு வைட்டமின் D அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு கிட்டப்பார்வைக்கு வித்திடும். தினமும் உடலுக்கு தேவையான வைட்டமின் D அளவை பெறுவதற்கு சூரிய ஒளி அவசியமானது. குழந்தைகள் தினமும் குறிப்பிட்ட நேரம் வெளிப்புற விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் D அளவை சூரியக்கதிர்கள் மூலம் பெற்றுவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.