இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் – மகிந்தானந்த அளுத்கமகே

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணைமுறையில் கிடைக்கும் எனவும், பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறைவடைவதுடன், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் குறைவடையும் என முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவலப்பிட்டி நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாவலப்பிட்டி நகரசபையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (11.02.2023) இடம்பெற்ற கூட்டத்தின்போதே மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் கடன் தவணைமுறையில் கிடைக்கும். பணம் கிடைத்தவுடன் இலங்கையில் டொலரின் பெறுமதி குறையும். அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளும் குறைவடையும்.

மேலும், நாவலப்பிட்டி நகர சபைக்கு ஐ.தே.க மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிருக்கின்றனர்.

எதிர்வரும் மார்ச் மாதம்10ஆம் திகதி நாவலப்பிட்டி மாநகர சபையின் ஆட்சியை அந்த வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள்.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது. தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டரை வருடங்கள் ஆட்சியில் இருக்கும் என்றும் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.