சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயார் என ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தாலும் நாட்டை முடக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் தடுப்பு செயலணி என்பனவற்றின் பரிந்துரைக்கு அமைய நாட்டை முடக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு உலகின் அநேக நாடுகள் மூன்று வழிமுறைகளை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்குவது, 40 முதல் 50 வீதம் வரையிலான சனத்தொகைக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றி நாட்டை முழுமையாக திறத்தல் மற்றும் குறிப்பிட்டளவு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றி நாட்டை பகுதியளவில் திறப்பது ஆகிய வழிமுறைகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்த மூன்றாவது வழிமுறையை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒன்றரை வருடத்தில் பல தடவைகள் நாடு முடக்கப்பட்டது எனவும், நிரந்தர வருமானமற்ற மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.