ஹமாசுக்கு உதவி செய்வது யார் ? ஈரானுக்கு இருக்கின்ற உணர்வு அரபு நாடுகளுக்கு இல்லாதது ஏன் ?

பாலஸ்தீனில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூவாயிரத்திற்கு மேற்பட்ட ராகெட்ககளை ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசத்துக்குள் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

1987 இல் சேக் அஹமத் யாசின் அவர்களினால் ஹமாஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் ஏராளமான யுத்தங்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு சண்டைகளும் தங்களுக்கான அடுத்தகட்ட தாக்குதலை விருத்தி செய்து மேம்படுத்தும் பயிற்சிக் களமாகவே ஹமாஸ் இயக்கம் பயன்படுத்தி வருகின்றது.

இஸ்ரேல் முழுவதும் ஹமாஸ் இயக்கத்தின் ஏவுகணை வீச்செல்லைக்குள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கடந்த 2017  இல் கட்டுரை எழுதி இருந்தேன்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தமானது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சாதனமான “அயன் டோம்” தாக்குதலை எதிர்கொள்வதற்கான பயிற்சிக்களமாக கருதப்படுகின்றது.      

அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் உலகின் அதிநவீன ஆயுதங்களை கொண்டுள்ள நிலையில், எந்தவித அரபு நாடுகளின் உதவிகளும் இல்லாமல் ஹமாஸ் இயக்கத்தினரால் எவ்வாறு இஸ்ரேலுடன் போர் புரியும் இராணுவ ஆற்றலை பெற்றார்கள் என்பதுதான் கேள்வியாகும்.

பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்கின்றோம் என்றபோர்வையில் மேற்குக்கரையை ஆளுகின்ற மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கே (PLO) அரபு நாடுகள் உதவி செய்து வருகின்றன.

ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் அறிவித்துள்ளதன் காரணமாக அரபுகலம் ஹமாஸ் இயக்கத்துக்கு உதவி செய்வதற்கு முன்வருவதில்லை.  

2006 இல் நடைபெற்ற தேர்தலில் மஹ்மூத் அப்பாசின் PLO வை மக்கள் நிராகரித்ததுடன் ஹமாஸ் இயக்கத்தினருக்கே மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல் நிராகரித்ததனால் ஜெருசலம் உள்ளடங்குகின்ற மேற்குக்கரையை ஆட்சி செய்வதற்கு ஹமாஸ் இயக்கத்தை அனுமதிக்கவில்லை.  

PLO இஸ்ரேலை அங்கீகரித்ததனால் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் அங்கீகாரம் மஹ்மூத் அப்பாசுக்கு கிடைத்தது. இதன் காரணமாக மேற்குக்கரை PLO வின் நிருவாகத்தின் கீழ் உள்ளது.

ஆனால் காசா பிரதேசத்தை ஹமாஸ் இயக்கம் ஆட்சி செய்கின்றது. மேற்குக்கரைக்கும், காசாவுக்கும் இடைப்பட்ட பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு துண்டாடப்பட்டுள்ளதனால் இரண்டு பிரதேசங்களும் நிலத்தொடர்பற்றதாக காணப்படுகின்றது.

காசா பிரதேசம் அரபு நாடுகளினால் கைவிடப்பட்ட நிலையில், அவர்களுக்கான முழு இராணுவ உதவிகளையும் ஈரான் செய்து வருவதுடன் பொருளாதார உதவிகளை கட்டார் செய்து வருகின்றது.

நாங்கள் ஈரான் பற்றி கூறுகின்றபோது இயக்க வெறிகொண்டவர்கள் ஷீயா முத்திரை பதிக்க வருவதுடன் ஈரானும் யூதர்களும் நண்பர்கள் என்று தங்களது அறியாமையை காண்பிப்பது வழமை.

அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்துள்ள நிலையில், உலகில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கு அவர்கள் வழங்கி வருகின்ற இராணுவ உதவிகளை ஒருபோதும் நிறுத்தியதில்லை.

அந்தவகையில் ஹமாஸ் இயக்கத்துக்கு நீண்ட காலங்களாக தொடர்ந்து ஈரான் உதவி செய்து வருகின்றது. “எந்தவித நிபந்தனைகளுமின்றி ஈரான் தங்களுக்கு உதவி செய்து வருகின்றது” என்று ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

ஹமாஸிடம் உள்ள ஏவுகணைகள், ரொக்கேட்கள், ஆளில்லா விமானங்கள் உட்பட அனைத்தும் ஹமாசினால் தயாரிப்பதற்கான தொழில் நுட்பம் மற்றும் நிதி உதவிகளையும் ஈரான் செய்துவருகின்றது.

இதற்கு மேலதிகமாக பொருளாதார உதவிகளை கட்டார் அரசு செய்துவருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தலைமை செயலகம் கட்டாரில் இருந்தே செயல்பட்டு வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது