இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஏற்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை தாண்டி உள்ளது.
இதையடுத்து ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. கொரோனா நெருக்கடியில் சிக்கி உள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பல்வேறு நாடுகள் அறிவித்து உள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி இருப்பதாக தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் தொலைபேசியில் பேசினார்கள். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசினர். இதில் கொரோனா பரவல், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் இரு நாடுகளிலும் நிலவும் கொரோனா சூழல் குறித்து பேசினேன். மேலும் தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை தடையின்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவுக்கு அமெரிக்க செய்ய முன் வந்துள்ள உதவிகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டேன்” என்றார்.
மோடியுடன் ஆலோசனை நடத்தியது குறித்து அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-
“இன்று நான் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி மூலப்பொருட்கள் ஆகியவற்றை விரைவில் தந்து உதவ உறுதி அளிக்கப்பட்டது.
கொரோனாவால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது இந்தியா உதவி செய்தது. இப்போது அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய போகிறோம்” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்கு எதிராக இநதியா நடத்தி வரும் யுத்தத்தில் அமெரிக்கா துணை நிற்கும் என்று அதிபர் ஜோபைடன் உறுதி அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை போர்கால அடிப்படையில் அனுப்பும் பணி அடுத்த சில நாட்களுக்குள் தொடங்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென் டகன் அறிவித்து உள்ளது.