டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்- ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தல்


இந்தியாவில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2½ மாதங்களுக்கு மேல் போராட்டம் நீடித்து வருகிறது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

விவசாயிகளும் மத்திய அரசும் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைதியான போராட்டத்துக்கு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஐ.நா. சபையும் தனது கருத்தை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்திய அரசும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இரு தரப்பினரையும் (இந்திய அரசு, விவசாயிகள்) கேட்டுக்கொள்கிறோம்.

போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். இரு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் மனித உரிமைகள் வழங்கும் வகையில் சமமான தீர்வுகளை கண்டறிவது மிகமுக்கியம் என்று தெரிவித்துள்ளது.